அகன்ற திரையில் படம் பார்க்கும் எம்எல்ஏ உள்ளிட்டவர்கள்
அகன்ற திரையில் படம் பார்க்கும் எம்எல்ஏ உள்ளிட்டவர்கள்  
அரசியல்

தாமதமான அரசு நிகழ்ச்சி்; திரையிடப்பட்ட `பொன்னியின் செல்வன்': ரசித்த எம்எல்ஏக்கள், மேயர்

காமதேனு

தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்  அகன்ற திரையில் `பொன்னியின் செல்வன்' திரைப்படம் பார்த்த எம்எல்ஏக்கள் மற்றும்  மேயரின் செயல் பலராலும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்த  காமராஜர் காய்கனி மார்க்கெட்டை  இடித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மொத்தம் 20 கோடியே 26 லட்சம் செலவில்  புதிய மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

இதே போல் தஞ்சாவூர் பி.ஏ.ஓய். நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் 1 கோடியே 95 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. காமராஜர் மார்க்கெட் மற்றும் ஸ்கேட்டிங்  மைதானம் ஆகியவற்றை  பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  தஞ்சாவூரில்  எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், மண்டலக்குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, ரம்யாசரவணன் உட்பட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முன்னதாக  தமிழக முதல்வர் காணொளி மூலம் காலை 10 மணிக்கு திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி தொடங்காமல்  காலதாமதமானது. இதனால் காணொளி காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த அகன்ற எல்இடி திரை மூலம் `பொன்னியின் செல்வன்' திரைப்படம் திரையிடப்பட்டது. முதல்வர் நிகழ்ச்சி தொடங்கும் வரை  சுமார் 1.30 மணி நேரம் திரைப்படம் ஓடியது. இதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் பார்த்து ரசித்தனர்.  மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அரசு நிகழ்ச்சியின் போது அகன்ற திரையில் திரைப்படம் பார்த்தது பல தரப்பினராலும் கடுமையான  விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

SCROLL FOR NEXT