அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன் முடிந்த விவகாரத்தை மீண்டும் கிளறுவது நல்லதல்ல: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் காட்டம்!
அரசியல்

முடிந்த விவகாரத்தை மீண்டும் கிளறுவது நல்லதல்ல: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் காட்டம்!

காமதேனு

’’வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாகப் புரளி கிளப்பியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விரிவான அறிக்கை கொடுத்துள்ள நிலையில் அதிமுகவினர் இந்தப் பிரச்சினையை மீண்டும் கிளறுவது தேவையற்றது’’ என அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நீர்வளத்துறை- தொழிலாளர் நலத்துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயக்குமார், ’’கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த வட மாநில தொழிலாளர்களுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கி தன் பிள்ளைகளைப் போலப் பாவித்தவர் எடப்பாடி பழனிசாமி. பத்தாண்டுகளாக வராத வடமாநில பிரச்சினை. இப்போது ஏன் வருகிறது’’ எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் , வடமாநில தொழிலாளர்கள் குறித்துப் புரளி கிளப்பியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன், ’’வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாகப் புரளி கிளப்பியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முதலமைச்சர் விரிவான அறிக்கை கொடுத்துள்ளார். வடமாநில அதிகாரிகளும் தமிழகத்தில் நிலைமை சீராக உள்ளதாகத் தெரிவித்துவிட்டார்கள். இந்தப் பிரச்சினை அடங்கிவிட்ட நிலையில், மீண்டும் கிளறுவதுபோல் உறுப்பினர் பேசுகிறார். அதனை நீக்க வேண்டும்’’ எனக் கோரினார்.

உடனடியாகக் குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முடிந்து போன விஷயத்தைப் பேசவில்லை. இனி நடக்கக்கூடாது என அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாகக் கூறினார்.

SCROLL FOR NEXT