அரசியல்

`முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றாமல் இருப்பது நம்பிக்கை துரோகம்'- டி.டி.வி.தினகரன் ஆதங்கம்

காமதேனு

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தகட்ட போராட்டத்தை மேற்கொள்ளவிருக்கும் அரசு மருத்துவர்களை அழைத்து பேசி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்த கட்ட போராட்டங்களை மேற்கொள்ள இருக்கும் சூழ்நிலையில் அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர அரசு முன்வர வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மருத்துவர்களின் போராட்டங்களில் பங்கேற்று ஆட்சிக்கு வந்தவுடன் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், முதலமைச்சராகி ஓராண்டு முடிந்த பின்பும் அவற்றை நிறைவேற்றாமல் இருப்பது நம்பிக்கை துரோகமாகும்.

தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அதனால் ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். அதனால் உடனடியாக அரசு மருத்துவர்களை அழைத்து பேசி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மனசாட்சியோடு நிறைவேற்றாமல் இழுத்தடித்து ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பதிவில், "பழனிசாமி கம்பெனியின் ஆட்சியில் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து தி.மு.க அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஓராண்டுக்கு மேலாக மௌனம் காப்பது ஏன்?. இது தொடர்பாக புகார் அளித்தவர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிய பிறகும் லஞ்ச ஒழிப்புத்துறை மழுப்பலான பதிலை தெரிவித்திருப்பது ஏன் அப்படியென்றால் திமுக-வும் முதல்வர் ஸ்டாலினும் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றதான் ஊழல் ஒழிப்பு வேஷம் கட்டி வந்தார்களோ?" என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT