சுந்தரி ராஜா
சுந்தரி ராஜா 
அரசியல்

தலைமையை எதிர்க்க தயங்காத திமுகவினர்: கொந்தளித்த கூட்டணி கட்சிகள்

கரு.முத்து

கடலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவினர் தங்கள் தலைமைக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி பல்வேறு சித்து விளையாட்டுகளை காண்பித்தனர். கட்சி அறிவித்திருந்தும் கூட தங்கள் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை தோற்கடித்திருக்கின்றனர்.

கடலூர் மாநகராட்சி மேயர்

கடலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக மாவட்ட பொருளாளர் குணசேகரன், என் மனைவி கீதாதான் அறிவிக்கப்படுவார் என்று பார்த்தார். அதற்காக கட்சி மேலிடம் வரை குணசேகரன் முட்டி மோதிப் பார்த்தார். ஆனால் நகரச் செயலாளரான ராஜாவின் மனைவி சுந்தரியை மேயர் வேட்பாளராக அறிவித்தது கட்சித் தலைமை. இதை குணசேகரன் தரப்பினர் ஏற்கவில்லை. மாவட்ட அமைச்சரான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு ராஜாவுக்கு இருந்ததால் ராஜாவின் மனைவி சுந்தரி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் தரப்பினர் திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 23 உறுப்பினர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு போய் ரிசார்ட்டில் தங்க வைத்திருந்தனர்.

அதனால் அவர்கள் தரப்பு வேட்பாளரே வெற்றி பெறுவார்கள் என்ற நிலை இருந்து வந்தது. இதனால் ரிசார்ட் மற்றும் கடலூர் மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று தேர்தல் நடைபெறும் நேரத்தில் தங்கள் வசம் உள்ள மாநகராட்சி உறுப்பினர்களை குணசேகரன் தரப்பினர் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கீதா குணசேகரன் போட்டியிட மனு தாக்கல் செய்தார். ஏற்கெனவே சுந்தரி ராஜாவும் மனுத் தாக்கல் செய்திருந்ததால் தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மறைமுக தேர்தல் நடந்தது. ஆனால் திமுக உறுப்பினர்கள் பலரும் கட்சி அறிவித்திருந்த சுந்தரிக்கே வாக்களித்தனர். தேர்தலில் கீதா 12 வாக்குகள் மட்டுமே வாங்கிய நிலையில் சுந்தரி 19 வாக்குகளைப் பெற்று மேயராக தேர்வானார். இதனையடுத்து அவருக்கு மாநகராட்சி ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தோல்வியடைந்த கீதாவின் கணவர் குணசேகரன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை உட்கொண்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மங்கலம்பேட்டை பேரூராட்சி

மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக தலைமை. காங்கிரசின் வேட்பாளராக வேல்முருகன் அறிவிக்கப்பட்டார். இன்று நடைபெற்ற தேர்தலில் அவர் தலைவர் பதவிக்கு மனு செய்த நிலையில் எதிர்பாராத விதமாக அவரை எதிர்த்து திமுக சார்பில் சம்சாத் பேகம் என்பவரும் மனுத் தாக்கல் செய்தார். அதனால் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக தலைமை அறிவித்திருந்த காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து பேரூராட்சி தலைவரானால் திமுகவின் சம்சாத் பேகம். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் மங்கலம்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சி

நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி இடத்தை தனது கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கியிருந்தது திமுக தலைமை. அக்கட்சியின் சார்பில் கிரிஜா திருமாறன் என்பவர் தலைவர் பதவிக்காக அறிவிக்கப்பட்டிருந்தார். இன்றைய தேர்தலில் அவர் தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்தபோது அவரை எதிர்த்து திமுக சார்பில் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் என்பவரும் மனு கொடுத்தார். இதனால் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கிரிஜா திருமாறன் 3 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். கூட்டணி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ஜெயந்தி இராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

இப்படி கடலூர் மாவட்ட திமுகவினர் தங்கள் தலைமைக்கு கட்டுப்படாமல் தங்கள் கட்சி வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியது என கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

SCROLL FOR NEXT