சென்னை உயர் நீதிமன்றம் 
அரசியல்

தமிழக அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

காமதேனு

முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கலாம் என்று தலைமை நீதிபதி ஒப்புதல் தெரிவித்திருக்கும் நிலையில் அந்த வழக்குகள் இன்று அவரது முன்பு விசாரணைக்கு வருகின்றன.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்

தமிழ்நாடு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி உள்ளிட்டோர் பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் விடுதலை செய்த வழக்குகளின் தீர்ப்பை மறு ஆய்வு செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு  உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹெச் ராய், பி.கே.மிஸ்ரா பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்களின் காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இது குறித்து  உத்தரவிட்டனர்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை யார் விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி முடிவெடுப்பதுதான் சிறந்ததாகும். எந்த நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்? அல்லது தலைமை நீதிபதியே விசாரிக்கலாமா என்பதை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு  இன்று பட்டியல் இடப்பட்டுள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT