அரசியல்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர என்ன வழி? - பரூக் அப்துல்லா அதிரடி கருத்து

காமதேனு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதம் உயிர்ப்புடன் இருப்பதாகவும், அண்டை நாடான பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் அதற்கு முடிவுகட்ட முடியும் என்றும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

ஜம்முவிலிருந்து பேருந்தில் கதுவாவை அடைந்த பரூக் அப்துல்லா, நேற்று மாலை பஞ்சாபின் பதான்கோட் வழியாக ஜம்மு காஷ்மீரில் நுழைந்த ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் இன்னும் உயிரோடு இருக்கிறது, பாகிஸ்தானுடன் பேசத் தொடங்கும் வரை அது முடிவடையாது என்பதை என் ரத்தத்தால் உங்களுக்கு எழுத்துப்பூர்வமாகத் தரப் போகிறேன். 16 முறை நம் எல்லைக்குள் நுழைந்து தரையிறங்கிய சீனாவிடம் பேசும்போது, ஏன் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் பின்வாங்குகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்துவது ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருமா என்ற கேள்விக்கு, "நாம் முயற்சி செய்ய வேண்டும், ஆனால் பாஜக அரசு தயக்கம் காட்டுகிறார்கள், ஏனெனில் அவர்கள் தங்கள் வாக்கு வங்கிக்காக முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் ஒருவருக்கொருவர் எதிராக வெறுப்பை பரப்ப வேண்டும். அவர்கள் பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் மற்றும் நமது நாட்டு வசிக்கும் முஸ்லிம்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தாமல் வெறுப்பை பரப்புகின்றனர். மக்களின் இதயங்களில் இருந்து வெறுப்பை அகற்றவில்லை என்றால், இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 30 ஆண்டுகளாக மிகவும் பாதிக்கப்பட்ட காஷ்மீரி பண்டிட்டுகளின் காயங்களுக்கு தைலம் பூச வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், வெறுப்பைப் பரப்பி வாக்குகளைப் பெறுவதற்காக ஒரு திரைப்படம் (தி காஷ்மீர் ஃபைல்ஸ்) வெளியிடப்பட்டது. இதனால் என்ன நடந்தது. பிரதமரின் தொகுப்பின் கீழ் வேலை வழங்கப்பட்டவர்களுக்கு கூட, காஷ்மீர் பயங்கரவாதத்தால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாதம் வெடித்ததில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் முஸ்லீம்கள் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது அமைச்சர்களில் ஒருவரின் காரில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து சிதறியது. மூவர்ணக் கொடியை நிலைநிறுத்தியதற்காக என் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் பலர் கொல்லப்பட்டனர். 1947ல் இந்தியாவா,பாகிஸ்தானா என தேர்வு செய்ய எங்களுக்கு வாய்ப்பு இருந்தது, ஆனால் நாங்கள் கவுரவமாக அமைதியாக வாழ்வோம் என்று நம்பியதால் இந்தியாவை விரும்பினோம்.

எவ்வளவு வெறுப்பை பரப்புகிறார்களோ, அவ்வளவு அதிகமாக அதிலேயே மூழ்கிவிடுவார்கள். நமக்கு ஒரு தைலம் வேண்டும், அன்பின் செய்தியை பரப்ப வேண்டும். மசூதிகளிலும் கோவில்களிலும் அல்லாமல் அனைவரின் இதயங்களிலும் இறைவன் வாழ்கிறார்.

வீட்டில் உள்ள குழந்தைகள், தாய், சகோதரிகளின் சாபம் இந்த அரசை வீழ்த்தும்” என்றார்.

SCROLL FOR NEXT