அரசியல்

10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது திமுகவுக்கு பலமா பாதகமா?

என்.சுவாமிநாதன்

பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு திமுக கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயே மாறுபட்ட ரியாக்‌ஷனை வெளிப்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இதை வரவேற்றிருக்கும் நிலையில், திமுகவோ இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.

தீர்ப்பு வெளியான சில மணி நேரத்திலேயே, ’’சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் இது பின்னடைவு என்றே கருதவேண்டியுள்ளது” என தனது எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து, திமுகவின் இந்த நிலைப்பாடு சமூகநீதிக்கான குரலா அல்லது வாக்குவங்கி அரசியலின் மையப்புள்ளியா? என்கிற விவாதங்கள் இப்போது சூடுபறக்கின்றன.

ஆர்.ஆர்.முருகேஷ்

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என தீர்மானிக்க மத்திய அரசு சில வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி, இதுவரை எந்த இட ஒதுக்கீட்டிலும் வராத பொதுப்பிரிவினராக இருக்கவேண்டும். அவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். அவர்களது வீடு 1,000 சதுர அடிக்கு மிகாமல் இருக்கவேண்டும். சொந்தமாக ஐந்து ஏக்கர் வரை விவசாய நிலம் இருக்கலாம் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனைகளே இவ்விவகாரத்தை இன்னும் சர்ச்சையாக்கியது.

ஆண்டு வருமானம் 8 லட்சம் என்றால், மாதம் 65 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவர் உயர்வகுப்பு ஏழையா என்ற விமர்சனம் எழுந்தது. மார்க்சிஸ்ட் உள்ளிட்டக் கட்சிகள் அந்த அளவுகோலை விமர்சித்தாலும் இந்த இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால் திமுகவோ, இந்த இட ஒதுக்கீட்டையே முழுமையாக எதிர்க்கிறது.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த வெள்ளாளர் கூட்டமைப்பின் தலைவர் நாஞ்சில் கே.எஸ்.ராஜ்குமார், “ஒருவர் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் எனச் சான்றிதழ் வாங்க முதலில் நோட்டரி வழக்கறிஞரிடம் இருந்து 20 ரூபாய் பத்திரத்தில் அஃபிடவிட் வாங்க வேண்டும். அந்தச் சான்றிதழோடு இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதர சான்றுகளைப் போலவே அது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் வழியாக தாசில்தார் மூலம் உறுதி செய்யப்படும்.

வழக்கமாக, சாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை ஆயுட் காலம் முழுவதும் பயன்படுத்த முடியும். ஆனால், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான சான்றிதழின் ஆயுள் ஒருவருடம் தான். இந்தச் சான்றிதழையும் பாஜக மற்றும் முற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் அமைப்புகள் தீவிரமாக செயல்படும் பகுதிகளில் தான் வழங்குகிறார்கள். மற்ற இடங்களில் இந்தச் சான்றிதழே வினியோகிப்பது இல்லை. வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு இப்படி ஒரு சான்றிதழ் இருப்பதே தெரியவில்லை. அதிலும், 8 லட்சம் ரூபாய் வருவாய் உச்ச வரம்பு இருந்தாலும், முறையான வருவாயைத் தாக்கல் செய்தாலும் ஆண்டு வருமானம் 72 ஆயிரம், கூலி வேலை என போட்டால் தான் சான்றிதழ் என்கிறார்கள்.

ஆள்பவர்களுக்கே எங்களைப்பற்றி புரிதல் இல்லை. அவர்களுக்கு கீழ் வேலை செய்யும் வருவாய்த்துறையினருக்கு மட்டும் புரிதல் வந்துவிடுமா? அவர்களுக்கு நாங்கள் யார் என்பதைப் புரியவைக்க, வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் இருக்கும் முற்படுத்தப்பட்ட சமூகத்தினரைத் திரட்டி எங்கள் பலத்தைக் காட்டுவோம். எங்கள் வாக்கு திமுகவுக்கு இல்லை என்பதை இயக்கமாக முன்னெடுப்போம். சமூக நீதி என்ற பெயரில் முற்படுத்தப்பட்ட சமூகத்தினரை விலக்கி வைத்துவிட்டு மற்றவர்களை வாக்கு அரசியலுக்காக ஒன்று சேர்க்க கனவு காண்கிறது திமுக. அதனால் தான் அனைத்துக் கட்சிகளும் இந்த இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும்போது திமுக மட்டும் எதிர்க்கிறது. இது திமுகவுக்கு இருக்கும் சில சமூக வெறுப்பு மனோநிலையையே காட்டுகிறது” என்றார்.

பாஜகவின் ஆன்மிகம் - ஆலய மேம்பாட்டுப்பிரிவின் மாநிலச் செயலாளர் ஆர்.ஆர்.முருகேஷ் பேசும்போது, “இந்தத் தீர்ப்பை எதிர்த்ததன் மூலம் திமுக ஒட்டுமொத்த முற்படுத்தப்பட்ட சமூகத்திற்கும் துரோகம் செய்துள்ளது. திமுகவில் இருக்கும் முற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் அவர்கள் தலைமுறையையும் படுகுழியில் தள்ளியுள்ளது. இந்த தீர்மானம் பாராளுமன்றத்தில் வந்தபோதே கனிமொழி எதிர்த்தார். இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு போடுகிறார்கள். திமுகவில் இருக்கும் முற்படுத்தப்பட்ட சமூகத்தினரே மிகவும் வேதனையோடு எங்களிடம் இதைப் பகிர்கிறார்கள்.

கடந்த 2016 தேர்தலில் நாகர்கோவில், கன்னியாகுமரி தொகுதிகளை திமுக வென்றது. 2021-ல் நாகர்கோவில் தொகுதியை பாஜகவும், கன்னியாகுமரியை அதிமுகவும் வென்றது. அதற்கு அப்போது 10 சதவீத இட ஒதுக்கீட்டை திமுக எதிர்த்ததும் முக்கிய காரணம். கன்னியாகுமரி தொகுதியில் அதிகமாகவும், நாகர்கோவில் தொகுதியில் கணிசமாகவும் இருக்கும் முற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருக்கும் வெள்ளாளர் சமுதாய வாக்குகள் முற்றாக திமுகவை கைவிட்டன. நாகர்கோவிலில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை அவரது சொந்த சமூகமே கைவிட்டது.

சுசீந்திரம் கோயிலில் பூஜை வைக்கும் அர்ச்சகர் அறநிலையத்துறையிடம் இருந்து பெறும் சம்பளம் 6 ஆயிரம் ரூபாய் தான். அவருக்கான ஆண்டு வருமானமே 72 ஆயிரம் ரூபாய்தான். இப்படி இருப்பவரின் மகன் அல்லது மகளின் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை தடுப்பதும், எதிர்ப்பதும் தான் திமுகவின் சமூகநீதியா? உயர் வகுப்பில் பிறந்ததாலேயே முற்படுத்தப்பட்டவர்கள் வஞ்சிக்கப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

தமிழகம் முழுவதும் இருக்கும் முற்பட்ட சமூகத்தினர் மத்தியில் இதை பிரச்சாரமாக கொண்டு செல்ல உள்ளோம். சமூகநீதி என்னும் பெயரில் திமுக போலி முகமூடி அணிந்து நாடகம் போடுகிறது. முற்பட்ட பிரிவில் பல்வேறு சமூகத்தினரும் இனி திமுகவுக்கு வாக்களிப்பதில்லை எனத் தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள். 10 சதவீத இட ஒதுக்கீட்டில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொண்டு பிற்படுத்தப்பட்ட, இதர வகுப்பினரும் இந்தத் தீர்ப்பை ஆதரிக்கிறார்கள். இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர், இஸ்லாமிய சமூகங்களின் சில பிரிவுகள்கூட வருகிறது. அவர்களுக்கும் சேர்த்தே திமுக துரோகம் செய்கிறது” என்றார்.

ஆர்.எஸ்.பாரதி

இவ்விவகாரம் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். “மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இப்போது இந்த 10 சதவீதத்தை அனுமதித்தால் இட ஒதுக்கீட்டின் அளவு 60 சதவீதம் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது அல்லவா? பாஜக இதை திரித்து முற்படுத்தப்பட்ட மக்களிடம் கொண்டு போனாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சாதியை வைத்து பாஜக பிரச்சாரமே செய்தாலும் மக்கள் மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும்.

நவம்பர் 9-ம் தேதிகூட உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வந்தது. அதில், பட்டியலினத்தில் இருந்து மதம் மாறி கிறிஸ்தவம், இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு எஸ்.சி சான்றிதழ் கிடையாது என தெளிவுபடுத்தியுள்ளனர். அந்தத் தீர்ப்பிலேயே இஸ்லாம், கிறிஸ்தவத்தில் சாதி இல்லாததால் எஸ்.சி சான்றிதழ் வழங்கமுடியாது எனக் கோடிட்டுக் காட்டியுள்ளனர். அப்படியென்றால் இந்து மதத்தில் சாதி இருக்கிறது என்றுதானே அர்த்தம். சாதி இருக்கிறது என்றால் இங்கே முற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு எப்படி சமூகநீதியாகும்?

பொருளாதாரத்தில் பின் தங்கியோர் உள்பட அனைத்து நிலையோருக்கும் தமிழகத்தில் நல்லகல்வி கொடுக்கிறோம். தமிழக அரசு இலவசக் கல்வி கொடுக்கிறது. அனைத்து சமூகத்தைச் சேர்ந்த நன்கு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டமெல்லாம்கூட இருக்கிறது. 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைத்துவிடும். அதனால்தான் திமுக இதை எதிர்க்கிறது. எப்போதும் சமூகநீதியின் காவலர்களாக திமுகதான் இருக்கும். எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் இதில் முரண்பட்டாலும், எங்கள் கொள்கையில் நாங்கள் உறுதியுடன் நிற்போம்” என்றார் அவர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கிய விவகாரம் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றிக்கு சவாலாக வந்து நின்றது. அதேபோல், இப்போது திமுக தரப்பில் என்ன தான் நியாய தர்மங்களைச் சொன்னாலும் மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு இந்த விவகாரத்தை சவாலாக்கும் விதமாக முற்பட்ட வகுப்பினரை நிச்சயம் பாஜக அணி ஓன்று திரட்டும். அதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதே தெரிய ஆரம்பித்திருக்கின்றன!

SCROLL FOR NEXT