அரசியல்

சட்டத்தை மீறிய மேயர் பிரியா மீது நடவடிக்கை எடுங்கள்: சென்னை காவல் ஆணையரிடம் புகார்

காமதேனு

சட்டத்தை மீறி, ஆபத்தை உணராமல் சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்ட மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கோரி சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

மேன்டூஸ் புயலால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் சேதமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, திமுக மாவட்ட செயலாளர் இளைய அருணா, ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபினேசர் ஆகியோர் முதலமைச்சர் கான்வாய் காரில் தொங்கியபடி பயணம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து சமூக ஆர்வலர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை கொருக்குப்பேட்டை பாரதிதாசன் தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம்(31) என்பவர் நேற்று சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், `கடந்த 10-ம் தேதி முதலமைச்சர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு ஆய்வுக்கு சென்ற போது மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, திமுக மாவட்ட செயலாளர் இளைய அருணா மற்றும் ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபினேசர் ஆகியோர் பொதுவெளியில் சட்டத்தை மீறும் வகையில் காரில் தாங்கியபடி சென்றுள்ளனர். இது மோட்டார் வாகன சட்டத்தின் படி குற்றமாகும். மேலும் அரசு துறையில் இருந்து கொண்டு சட்டத்தை மீறி, ஆபத்தை உணராமல் சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்ட மேற்கண்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT