திருமாவளவன் 
அரசியல்

பாஜக உடன் திருமாவளவன் அண்டர் டீலிங்... கொளுத்தி போட்டார் தடா பெரியசாமி!

சந்திரசேகர்

"சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெற பாஜக விரும்புகிறது. அதனால், பாஜகவுடன் திருமாவளவன் அண்டர் டீலிங் செய்துள்ளார்" என்று, அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி

பாஜக மாநில பட்டியலின அணி தலைவராக இருந்த தடா பெரியசாமி, இன்று அதிமுகவில் இணைந்துக் கொண்டார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தடா பெரியசாமி அதிமுகவில் ஐக்கியமானார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தடா பெரியசாமி, "பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராகவும் இருந்தேன். சிதம்பரம் தொகுதி அமைப்பாளராகவும் இருந்தேன். இத்தொகுதியில் தொடர்ந்து தேர்தல் களப்பணி ஆற்றி இருக்கிறேன். அதனால், மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் நான் நின்றால், தன்னால் வெற்றிப் பெற முடியாது என்று திருமாவளவன் புலம்பியதாக, அவர் தரப்பில் இருந்து எனக்கு தகவல் வந்தது. இதுகுறித்து பாஜகவின் தலைமைக்கு தெரியப்படுத்தினேன்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

திருமாவளவன் தோல்வி பெற வேண்டும் என்பது பாஜகவின் எண்ணமாக இருக்கிறது. இந்நேரத்தில் சிதம்பரத்தில் நமக்கான சூழ்நிலை இருப்பதால், எனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தேர்தல் களப்பணியாற்றி வந்தேன். ஆனால், வேட்பாளர்கள் பெயரில் என்னுடைய பெயர் இல்லை. சிதம்பரம் தொகுதியில் என்னை கேட்காமல் கார்த்திகாயினிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. திருமாவளவனுக்கு ஆதரவாக பாஜக செயல்படுகிறது. என்னுடன் கலந்து பேசாமல் தன்னிச்சையாக, சர்வாதிகார போக்கோடு மாநில தலைவர் அண்ணாமலை முடிவு எடுத்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் திட்டமிட்டு என்னை தவிர்த்தனர். பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவருக்கு மரியாதை இல்லை. இவர்கள் எப்படி மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய பட்டியலின மக்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். அவர்களின் வளர்ச்சிக்காக எப்படி பாடுபடுவார்கள். இதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே அதிமுகவில் இணைந்துள்ளேன்" என்றார்.

SCROLL FOR NEXT