ரூபி மனோகரன்
ரூபி மனோகரன் 
அரசியல்

காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனின் சஸ்பெண்ட் ரத்து

காமதேனு

காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்து இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் இந்த இடைநீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

நாங்குநேரி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் இருப்பவர் ரூபி மனோகரன். சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மூவர் படுகாயம் அடைந்தனர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன், எம்.பியும் கட்சியின் எஸ்.சி அணித்தலைவருமான நிரஞ்சன்குமார் ஆகியோர் நேற்று (நவ.24) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதன் அடிப்படையில் நேற்று கூடிய ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் நிரஞ்சன் குமார் ஆஜர் ஆனார். ஆனால் ரூபி மனோகரன் விளக்கத்தையும், நேரில் ஆஜராக அவகாசமும் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அறிவித்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரூபி மனோகரன், “கடந்த இருபது வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் உழைத்து வருகிறேன். நாங்குநேரி தொகுதியில் கட்சியை மிகவும் வலுவாக வைத்திருக்கிறேன். அதிக உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறேன். செய்யாத தவறுக்காக என்னைக் கட்சியில் இருந்து நீக்கியிருப்பது வருத்தம் அளிக்கிறது” என்றார். இதனிடையே அவர் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கப்போவதை உணர்ந்த திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் அவர்களே பொறுப்பில் இருந்து விலகியும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோரும் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், “ரூபி மனோகரன் மீது எடுத்துள்ள நடவடிக்கை கட்சி விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது. இதனால் சஸ்பெண்ட் உத்தரவு தடை செய்யப்படுவதுடன், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையும் நிறுத்தி வைக்கப்படுகிறது ”என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT