அரசியல்

கலசங்களோடு கோயிலை சுற்றிவந்த துர்கா ஸ்டாலின், மகள், மருமகன்: கடும் விமர்சனம் செய்த சூர்யா சிவா!

காமதேனு

‘படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்று ஒரு பழமொழி உண்டு. தருமபுரியில் ஒரு டாக்டர் பைத்தியம் இருக்குமே, தேவையில்லாததெல்லாம் பேசுமே, இப்ப எங்க போச்சு அது?’ என ட்விட்டரில் சூர்யா சிவா பதிவு செய்து பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், மருமகன் சபரீசன் உள்ளிட்ட பலரும் கடவுள் பக்தி கொண்டவர்கள். கருணாநிதி மறைவுக்குப் பிறகு அதிக அளவில் கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார் துர்கா ஸ்டாலின். சபரீசனும் யாகம், சிறப்பு வழிபாடு என அனைத்து இந்து மத நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் ‘திமுகவில் உள்ள 90 சதவீதம் பேர் இந்துக்கள் தான்; நாங்கள் இந்துக்களுக்கு எதிரி இல்லை’ என ஸ்டாலின் அடிக்கடி தெரிவித்து வந்தார். ஆனால், தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் அரசு நிகழ்ச்சிகளில் இந்து மத பூஜைகள் செய்வதைத் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இது சமூக வலைதளங்களில் பரவி விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்காததைக் கண்டித்து பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முதல்வருக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். கடவுள் மறுப்பு கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக முதல்வர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் சீர்காழி அடுத்த கீழப்பெரும்பள்ளத்தில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலானது துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருக்குக் குலதெய்வ கோயில். இதில் கலந்து கொண்ட முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், ஸ்டாலின் மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி என அவரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவர்கள் கலசங்களோடு கோயிலை சுற்றிவந்த படங்கள் இணையத்தில் வைரலாகின. இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என திமுகவினரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். திமுக எம்பி திருச்சி சிவாவின் மகனும், பாஜக பிரமுகருமான சூர்யா சிவா இதைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்த வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்று ஒரு பழமொழி உண்டு. தருமபுரியில் ஒரு டாக்டர் பைத்தியம் இருக்குமே, தேவையில்லாததெல்லாம் பேசுமே, இப்ப எங்க போச்சு அது?’ தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT