அரசியல்

நிச்சயமாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார்: சீமான் கணிப்பு

காமதேனு

``திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சராவார்'' என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கணித்துள்ளார்.

கரோனா காலத்தில் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மதுரவாயலில் உள்ள தனது வீட்டின் முன்பு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கரோனா காலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி மதுரவாயல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அதிமுக ஆட்சி காலத்தில் என்மீது வழக்கு போடப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு டிஜிபி சைலேந்திரபாபு கரோனா காலத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால், எங்களை மட்டும் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் வரவேண்டும் என அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம்.

உதயநிதி ஸ்டாலின் மீதும் கரோனா காலத்தில் அதிக வழக்குகள் போடப்பட்டன. தற்போது அவர் மீது போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்வதற்காக இதனைக் கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சராவார். ஐந்தாண்டுகள் அமைச்சராக மாட்டேன் என எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள். அதன் பிறகு நான் பேசுகிறேன். பேசு பொருளாக்கி அமைச்சராக்க முயற்சி நடக்கிறது" என்றார்.

SCROLL FOR NEXT