கவுதம்.
கவுதம். 
அரசியல்

கொங்கு நாடு மக்கள் கட்சி நிர்வாகி கொலையில் திடீர் திருப்பம்: கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்

காமதேனு

நாமக்கல் மாவட்டத்தில் கொங்கு நாடு மக்கள் கட்சி நிர்வாகி கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை ஏவி அவர் கொல்லப்பட்டது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பாதரையைச் சேர்ந்தவர் கவுதம் (31). நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர், கொங்கு நாடு மக்கள் தேசிய மக்கள் கட்சியின் பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி அவரை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்த நிலையில், மூன்று நாட்கள் கழித்து சங்ககிரி அருகே மேட்டுக்காடு ஏரிக்கரை முள்புதரில் கவுதம் சடலமாக மீட்கப்பட்டார். அரசியல் ரீதியான மோதலில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் கருதினர். ஆனால், தீவிர விசாரணையில் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நடந்தது தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் கவுதமின் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த குணசேகரன், பிரகாஷ், தீபன் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, 15 லட்ச ரூபாயை நிதி நிறுவனத்தில் தீபன் கையாடல் செய்துள்ளார். அதைக் கண்டுபிடித்த கவுதம், உடனடியாக பணத்தைத் திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். தராவிட்டால் போலீஸில் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார்.

இதனால் தீபன் கூட்டாளிகளோடு கூலிப்படையை ஏவி இந்த கொலையைச் செய்ய திட்டமிட்டார். அந்தக் கும்பல் கவுதமை கடத்தி கத்தியால் குத்திக் கொலை செய்தது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கூலிப்படையாக செயல்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அரவிந்த் (24), முகேஷ் (30), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தமிழரசன் (38) ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT