அரசியல்

பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் மரணம்

என்.சுவாமிநாதன்

பிரபல தமிழ்ப் பேச்சாளரும், இலக்கிய உலகில் தமிழ்க் கடல் என அழைக்கப்படுபவருமான நெல்லை கண்ணன் இன்று உயிரிழந்தார்.

நெல்லை கண்ணன்

திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை கண்ணன்(77) தமிழ் இலக்கிய உலகம் அறிந்த ஆளுமையாக வலம் வந்தவர். ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளராக வலம்வந்த நெல்லை கண்ணன், முன்னாள் முதல்வர் கருணாநிதியை எதிர்த்தும் தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார். காங்கிரஸ் கட்சியின் தீவிர செயல்பாடுகளில் இருந்து வயோதிகத்தால் ஒதுங்கியிருந்த நெல்லை கண்ணன் பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் என்னும் முறையில் தமிழகம் முழுவதும் பயணித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவி நடத்திய" தமிழ் பேச்சு..எங்கள் மூச்சு" என்னும் நிகழ்ச்சிக்கும் நடுவராக இருந்தார்.

காமராஜரின் மீது தீவிர பற்றுக்கொண்ட நெல்லைகண்ணன் அவரது புகழை மேடைதோறும் பேசிவந்தார். நெல்லை கண்ணன் வயோதிகத்தின் காரணமாக கடந்த சில தினங்களாகவே உடல் சோர்வுற்றுக் காணப்பட்டார். எப்போதும் சமூக வலைதளங்களிலும், குறிப்பாக முகநூலில் தொடர்ந்து பதிவுகள் எழுதிவந்த நெல்லை கண்ணன், கடந்த ஜூலை 4-ம் தேதிக்குப் பின் எந்த பதிவுகளும் எழுதவில்லை. வயோதிகத்திற்கே உரிய உடல் தளர்வு அவரை வாட்டி வதைக்க, வீட்டில் இருந்தவாறே மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டார்.

இந்த நிலையில் இன்று அவரது இல்லத்திலேயே நெல்லை கண்ணனின் உயிர் பிரிந்தது.

நெல்லை கண்ணன் தன் பேச்சாலேயே பல சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார். இந்திய சமூக ஜனநாயகக் கட்சி சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்புப் போராட்டட்தில் இவர் ‘’சோலிய முடிக்க வேண்டாமா?’’எனப் பேசிய பேச்சு கைதுவரை கொண்டு சென்றது. அண்மையில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்ட நெல்லை கண்ணனுக்கு இளங்கோவடிகள் விருது வழங்கும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலினை நோக்கி," உங்கள் கடைக்கண் பார்வையை என் மீதும் வைத்துக்கொள்ளுங்கள்" என்றதோடு, "திருமாவளவன் மடியில் தான் என் உயிர் போக வேண்டும்" என்றும் பேசினார். அதேகூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரை அனாதைகள் என்று விமர்சித்து, அவர்கள் என்னையும் ஒருநாள் அநாதையாக்குவார்கள் என்று அப்போது நினைக்கவில்லை எனவும் சர்ச்சையாகவே பேசினார் நெல்லை கண்ணன். மறைந்த நெல்லை கண்ணனுக்கு சுகா, ஆறுமுகம் என இருமகன்களும், மனைவியும் உள்ளனர். அரசியல் ரீதியாக பலமுறை நா பிறழ்ந்திருந்து சர்ச்சையாகி இருந்தாலும், ஆழ்ந்த தமிழ் புலமையும், இலக்கிய செறிவும் நெல்லை கண்ணனின் தனித்திறமை. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்.

SCROLL FOR NEXT