அப்பாவு 
அரசியல்

என் மகனுக்கு சீட் கொடுக்காததால் அதிருப்தியா?... தடாலடியாக பதில் சொன்ன சபாநாயகர் அப்பாவு!

காமதேனு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனது மகனுக்கு வாய்ப்பு வழங்காததால் நான் அதிருப்தியில் இருப்பதாக கூறுவது தவறு என தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்ட ஞானதிரவியம் வெற்றிபெற்றார். எனவே இந்த முறையும் இத்தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படும் என கணக்குப் போட்டு திமுகவிலிருந்து 44 பேர் விருப்ப மனு அளித்தனர். அதில் சபாநாயகர் அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவுவும் ஒருவர். ஆனால் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் ப்ரூஸ் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதனிடையே நெல்லையில் சீட் கிடைக்காத அதிருப்தியில் சபாநாயகர் அப்பாவு உட்படப் பல திமுக நிர்வாகிகள், தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியானது.

தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு

இந்த சர்ச்சை குறித்து நாங்குநேரியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, “திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதிலோ, எனது மகனுக்கு சீட் கொடுக்காததாலோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 44 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். திருநெல்வேலி தொகுதியில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் போது கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவரணி செயலாளராகி உள்ள எனது மகனுக்குப் போட்டியிட வாய்ப்பு அளித்தால் அது எப்படிச் சரியாகும்?.

அப்பாவு

எனது மகனுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்கக் கூடிய அளவில் விபரம் இல்லாதவன் இல்லை நான். யார் கொடுத்த அழுத்தம் காரணமாக இது போன்ற செய்தி அவதூறாகப் பரப்பப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியா கூட்டணி அமைவதற்குப் பிதாமகனே திமுக தலைவர் ஸ்டாலின் தான்” என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராபர்ட் ப்ரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சத்யா களமிறங்கி உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

SCROLL FOR NEXT