அரசியல்

‘சோனியா காந்தி என் பெயரை பரிந்துரைத்தார் என்பது வதந்தி’ - மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டம்

காமதேனு

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு சோனியா காந்தி தனது பெயரை ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை என்றும், அது வதந்தி என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் தலைவர் தேர்தல் வேட்பாளருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தியின் ஆதரவு குறித்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எனது பெயரை சோனியா காந்தி பரிந்துரைத்தார் என்பது வதந்தி, இதை நான் ஒருபோதும் கூறவில்லை. காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தேர்தலில் பங்கேற்க மாட்டார்கள் மற்றும் எந்த வேட்பாளரையும் ஆதரிக்க மாட்டார்கள் என்று சோனியா காந்தி தெளிவாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தியையும், என்னையும் இழிவுபடுத்துவதற்காக யாரோ இந்த வதந்தியை பரப்பியுள்ளனர்" என்று கூறினார். .

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் இப்போது சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் தேர்தலுக்காக உத்தரபிரதேச மாநிலத்துக்கு ஆதரவினை திரட்ட வந்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, “காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் 9300 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். அவர்கள் வாக்களித்து பெரும்பான்மை உள்ளவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். உத்தரபிரதேசத்தில் மொத்தம் 1250 வாக்காளர்கள் உள்ளனர்” என்று கூறினார்.

முன்னதாக அவர், “நாட்டின் நிலைமை மோசமாக இருப்பதால் நான் போராட விரும்புகிறேன். மோடியும் அமித் ஷாவும் ஜனநாயகத்திற்கு இடமில்லாத அரசியல் செய்கிறார்கள். சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் பலவீனமடைந்து வருகின்றன. அவர்களை எதிர்த்துப் போராட எனக்கு அதிகாரம் வேண்டும். அதனால்தான், பிரதிநிதிகளின் பரிந்துரையை ஏற்று நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்று கூறினார்.

SCROLL FOR NEXT