அரசியல்

`எங்க வாரிசுகள் அநாதைகளாகத் திரிய வேண்டுமா?'- திருமாவளவனிடம் கண்ணீர் விட்ட மக்கள்

காமதேனு

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்தார். அப்போது, அவர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுததோடு, திருமாவளவனின் காலில் விழுந்தது கண்கலங்க வைத்துவிட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக 4,250 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஏகனாபுரம் கிராமத்தில் நிலம் மற்றும் நீர்நிலை மற்றும் வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 55 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை இன்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

அப்போது, திடீரென பெண்களும், முதியவர்களும் காலில் விழுந்து கதறி அழுததோடு, எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய திருமாவளவன், கிராம மக்களின் இனிமையான வாழ்க்கை முறையை நான் அறிவேன் என்றும் விரைவில் இதற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் எனவும் உறுதி அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சென்னைக்கு குடிநீர் ஆதரவாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கம்பன் நீர் கால்வாய் 7 கிலோமீட்டர் அழிவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். நிலப்பரப்பில் விமான நிலைய அமைக்க மாற்றம் செய்ய வேண்டும். மக்களின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக முதல்வரை சந்தித்து வழங்க இருக்கிறேன்" என்று கூறினார்.

இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "பூர்வீக வாழிடத்தைப் பறிகொடுத்துவிட்டு எமது வாரிசுகள் அநாதைகளாகத் திரிய வேண்டுமா? என கேட்டு ஏகனாபுரம் மக்கள் கண்ணீர் சிந்தினர். அவர்கள் மனமுடைந்து குமுறி அழும்போது எம் நெஞ்சை உலுக்கியது. எனது விழிகளின் விளிம்புகளில் முட்டி நின்றன. வெப்பம் தெறிக்கும் கண்ணீர்த் திவலைகள்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT