அரசியல்

'சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றும் தீட்சிதர்களால் கட்டப்பட்டது அல்ல’: அமைச்சர் சேகர்பாபு காட்டம்

காமதேனு

“சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல. நம்மை ஆண்ட மன்னர்களால் உருவாக்கப்பட்டது. அந்த திருக்கோயிலில் வரும் வருமானங்களை முறையாகக் கணக்குக் காட்டுவது தீட்சிதர்களின் கடமை ” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து வருகிறார். சென்னையில் உள்ள பள்ளி ஒன்றை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத் துறை சார்பாக நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் பள்ளிகளை நானும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனும் முழுமையாகத் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறோம். 2021-2022 நிதி ஆண்டில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செயல்படும் பள்ளி கல்லூரிகளுக்கு சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ” என்றார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாகத் தீட்சிதர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர்,“நீதிமன்ற அவமதிப்பிற்குச் செல்ல யாரும் தடையாகவே இல்லை. இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடு தவறு என்றால், அவர்கள் தாராளமாக நீதிமன்றம் செல்லட்டும். நாங்கள் எங்களின் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து வருகிறோம். தவறு எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்கக் கூடிய கடமை இந்து சமய அறநிலைத் துறைக்கு உண்டு. அது ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல. நம்மை ஆண்ட மன்னர்களால் உருவாக்கப்பட்டது. அந்த திருக்கோயிலில் வரும் வருமானங்களை முறையாகக் கணக்குக் காட்டுவது தீட்சிதர்களின் கடமை. நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளைக் கேள்விகளாகக் கேட்கும் போது அதற்குப் பதில் சொல்ல வேண்டியது அவர்களின் கடமை. மன்னர்களால் சேர்த்து வைத்துள்ள சொத்துகள், நகைகள், விலை மதிப்பற்ற பொருட்களை ஆய்வு செய்வது இந்து சமய அறநிலையத் துறையின் கடமை. எங்களுடைய பணி நியாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்றால் நாங்களும் எங்களுடைய வாதத்தை முன்வைப்போம். எவ்வித அத்துமீறலும், அதிகாரத் துஷ்பிரயோகமும் நாங்கள் செய்யவில்லை ” என்றார்.

SCROLL FOR NEXT