விஜயலட்சுமி, சீமான் 
அரசியல்

சீமானின் செல்வாக்கை சிதைக்கும் சூழ்ச்சியா? - 4; பரபர க்ளைமேக்ஸ்... பெங்களூருக்கே திரும்பிய விஜயலட்சுமி!

ஆர்.தமிழ் செல்வன்

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தமிழக அரசியலில் புயலை கிளப்பி வந்த சீமான் - விஜயலட்சுமி விவகாரத்திற்கு, நடிகை விஜயலட்சுமியே முடிவுரை எழுதியுள்ளார். சீமான் மீது அவர் அளித்த புகாரை எழுத்துப்பூர்வமாக நேற்றிரவு வாபஸ் பெற்ற அவர், இனி சென்னைக்கே திரும்பப்போவதில்லை என கூறினார்...

திரைப்படங்களின் திரைக்கதையை மிஞ்சும் வகையில் இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய விஜயலட்சுமி, சீமான் மீது புகார் கொடுக்குமளவுக்கு சென்ற சம்பவங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

சீமான் - விஜயலட்சுமியின் உறவு சீராக இருந்த சூழலில் 2010ம் ஆண்டு தேன்மொழி என்பவர் தங்களது வாழ்வில் குறுக்கிட்டார். அவருக்கும் சீமானுக்கும் இடையில் காதல் இருந்ததாகவும், அந்த உறவு குறித்து மறைந்த திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா, நடிகை சுஹாசினி ஆகியோருக்கு தெரியும் என்றும், அவர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள நிச்சயம் செய்துகொண்டதாக தேன்மொழியே தன்னிடம் கூறியதாக விஜயலட்சுமி தெரிவித்திருந்தார். ஆனால், தேன்மொழிக்கும் தனக்குமான உறவு குறித்து பேசிய சீமான் அவர் ஒரு நல்ல கவிஞர் என்கிற அடிப்படையில் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருந்ததாக அப்போது விளக்கம் அளித்திருந்தார்.

சீமான் - விஜயலட்சுமி விவகாரம் தொடர்ந்து பெரிதாக்கப்பட்டுக் கொண்டே வருவதற்கு இன்னொரு முக்கிய காரணம் சீமான் தன் மீதான குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்காமல் இருந்து வந்ததுதான். இருவருக்கும் இடையில் நிலவிய உறவு எப்படிப்பட்டது என்பது எல்லாமே விஜயலட்சுமி தரப்பு சொல்வதாகவே உள்ளதே தவிர சீமான் இது குறித்து எதையும் கூறவில்லை.

கடந்த 2010ம் ஆண்டு விஜயலட்சுமியை, தேன்மொழி விருகம்பாக்கத்தில் நாம் தமிழர் அலுவலகம் அருகில் சந்திக்க நேர்ந்த போது, தனக்கும் சீமானுக்கும் திருமணம் நிச்சயம் ஆகி, பின்னர் சீமான் தன்னைக் கைவிட்டு விட்டார் என தேன்மொழி கூறியதாகவும், இதுகுறித்து, சீமானிடம்,கேட்கையில் தான் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நபர் தேன்மொழி என்று மட்டும் கூறியுள்ளார். இதனையடுத்துதான் தான் ஏமாற்றப்பட்டது போலே, நீங்களும் சீமானால் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள் என தேன்மொழி கூறியதாக விஜயலட்சுமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

சீமான்

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததே சீமான் - விஜயலட்சுமி வாழ்க்கையில் விரிசல் விழ காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள். இதையடுத்து சீமானிடம் நியாயம் கேட்டதால் விஜயலட்சுமியும், அவரது தாயாரும், பெங்களூரு சென்றுவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இச்சூழலில்தான் சேரன் இந்த பிரச்சனைக்குள் தலையிட்டுள்ளார். சேரன், விஜயலட்சுமி குடும்பத்துடன் நட்புறவுடன் இருந்ததோடு சீமானோடும் நட்பு பாராட்டியுள்ளார்.

இதன் காரணமாக சீமானை செல்போனில் அழைத்துப் பேசிய சேரன், விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்ளச் சொன்னதாக தெரிகிறது. சீமானோ, அந்த உறவை அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ள ஒன்றும் இல்லை எனக் கூறியுள்ளார். இந்த உரையாடலை சேரன் தனது செல்போனில் பதிவு செய்து விஜயலட்சுமியிடம் கொடுத்துள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயலட்சுமி 2011ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளித்தார்.

நடிகை விஜயலட்சுமி

இந்தக் காலகட்டத்தில் ஈழப்போர் முடிவுக்கு வந்திருந்தது. திமுக மீது சீமான் மட்டுமல்லாது தமிழ் உணர்வாளர்கள் பலரும் கோபத்தில் இருந்தனர். இதன் காரணமாக சீமான் 2011ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுகவும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதிமுகவுக்கு ஆதரவாக இருந்ததால், விஜயலட்சுமியின் புகார் மீது காவல் துறையினர் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்பட்ட நிலையில், சீமான் சமாதானமாக செல்லலாம் என விஜயலட்சுமியிடம் பேசியுள்ளதாக நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அப்போது, சீமான், இருவரும் சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம் என கூறியதால்,வழக்கை வாபஸ் பெற்றதாக விஜயலட்சுமியும் தெரிவித்திருந்தார்.

பிரச்சார கூட்டத்தில் சீமான் கோப்புப்படம்

இதையடுத்து, சீமான் கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்துகொண்டார். அந்த சமயத்தில் எல்லாம் விஜயலட்சுமி அமைதி காத்து வந்ததன் மர்மம் இதுவரையில் புரியாத புதிராகவே இருக்கிறது. இத்தனைக்கும் ஊரறிய, சென்னை நந்தனம் மைதானத்தில் தன் கட்சி தொண்டர்கள், நண்பர்கள் என ஓர் ஊரையே அழைத்து விருந்து வைத்து திருமணம் செய்து கொண்டார் சீமான். 2011 முதல் 2019 வரை இடைப்பட்ட காலங்களில் அவ்வபோது சில விமர்சனங்களை முன் வைத்த நடிகை விஜயலட்சுமி, கடந்த 2020ம் ஆண்டு திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதற்கு நாம் தமிழர் கட்சியினர் தன்னை கடுமையான மன அழுத்தத்திற்குள் தள்ளியதாக காரணமும் கூறியிருந்தார்.

கோப்புப்படம் விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற தருணம்

இதில் இருந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்த விஜயலட்சுமி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சர்ச்சைக்குள் வராமலேயே இருந்தார். இடையில் 2021ம் ஆண்டு அவரது தாயார் விஜயா இறந்த பிறகு முழுமையாகவே, சீமான் விவகாரத்தில் இருந்து விலகியிருந்த அவர், திடீரென மீண்டும் கடந்த மாதம் சீமான் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் அளித்தார். ஆனால், இம்முறை தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் நிறுவன தலைவர் வீரலட்சுமி அவருடன் இருந்தார்.

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த விஜயலட்சுமி

சீமான் மீதான புகாரை அடுத்து, கடந்த மாதம் 31ம் தேதி ராமபுரம் காவல் நிலையத்தில் கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் முன் ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து 1ம் தேதி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திலும் ஆஜராகி விஜயலட்சுமி ஆஜரானார். இந்த விசாரணைகளில் சீமான் தன்னை வற்புறுத்தி பலமுறை கருக்கலைப்பு செய்ததாக கூறியிருந்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தில் பெரும் திருப்பமாக கடந்த 7ம் தேதி அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இது இந்த வழக்கில் பெரும் திருப்பமாக பார்க்கப்பட்டது.

சீமான், ஈரோடு நீதிமன்றம்

இப்படி ஒருபக்கம் பரபரப்பான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க. காங்கிரஸூடனான கூட்டணியை விட்டு திமுக விலகினால், தான் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக பேசினார். அவரது இந்த பேச்சுக்கு விஜயலட்சுமி விவகாரம் ஏற்படுத்திய நெருக்கடியே காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இதையடுத்து, சீமான் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என கூறி வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதில் ஆஜராகாத சீமான் தனது வழக்கறிஞர் மூலமாக விளக்கம் அளித்திருந்தார்.

சீமான், விஜயலட்சுமி

சீமான் நாகரிகம் கருதி மெளனம் காத்தாரா? இல்லை இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்க வேண்டாம் என்று நினைத்தாரா என தெரியவில்லை. இதுகுறித்து அவர் பொதுவெளியில் பேசாமலே தவிர்த்து வந்தார். இந்த சூழலில் தான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சீமான் மீது களங்கம் விளைவிக்க சுப வீரபாண்டியன் மூலமாக, திமுக வீரலட்சுமியை பயன்படுத்தி, விஜயலட்சுமியை வைத்து புகார் கொடுத்துள்ளதாகவும் கூறினார். அப்போது, பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி அதில் உங்க அண்ணன் நாய் மாதிரி எனவும், துரைமுருகனை தொடப்பக்கட்டை என்றும் அநாகரீகமாக பேசி பரபரப்பைக் கூட்டியிருந்தார்.

சீமான், வீரலட்சுமி, விஜயலட்சுமி

இந்த சூழலில் கடந்த 13ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சீமான், விஜயலட்சுமி டாபிக்கை இதோடு விட்டுவிடுங்கள், இனிமேல் தொடர வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், தன் மேல் வைக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதாலேயே, இதுவரை விளக்கம் அளிக்காமல் இருப்பதாகவும் பேசினார். தன் மீது தவறு இருந்தால் இத்தனை லட்சம் இளைஞர்கள் எப்படி பின் தொடர்வார்கள் என கேள்வி எழுப்பிய அவர், ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் இந்த அவதூறு தன்னை நோக்கி வீசப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதுவே ஒரு பெண், தன்னை ஏமாத்திட்டு போய், அது புருஷனோட வாழ்ந்துட்டு இருக்கும் நிலையில் நான், என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு ஏமாத்திட்டு போயிருச்சுன்னு சொல்லிக் கொண்டிருந்தால் அதைக் கேட்பவர்கள் காறித் துப்பி செருப்பை கழட்டி அடிப்பார்களா இல்லையா? அப்படித்தான் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். எல்லாரும் அதை ரசித்து கொண்டிருக்கிறீர்கள் என்றார்.

சீமான், வீரலட்சுமி

சீமானின் இந்த செய்தியாளர் சந்திப்பு இந்த விவகாரத்தின் முதல் திருப்புமுனையாக பார்க்கலாம். இதைத் தொடர்ந்தே விஜயலட்சுமி பின்வாங்க தொடங்கினார்.

ஆனால், வீரலட்சுமியோ இந்த விவகாரத்தை பெரிதாக்க, வீரலட்சுமியின் தொனி, விஜயலட்சுமிக்கு நியாயம் கேட்பது போல் அல்லாமல், சீமான் கைது செய்யப்பட வேண்டும் என்பதாகவே இருந்து வந்தது. தனக்கு நாம் தமிழர் கட்சியினர் மிரட்டல் விடுப்பதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்தார். அப்போது பேசிய அவர், சீமான் விஜயலட்சுமியுடன், தன்னையும் காவல் நிலையத்தில் ஆஜராக கூறுகிறார். அவர் காவல் நிலையத்திற்கு தனது மனைவி கயல்விழியையும், தேன்மொழியையும் அழைத்து வருவாரா என்று கேள்வி எழுப்பினார்.

இம்முறை வீரலட்சுமிக்கு பதிலடி விஜயலட்சுமியிடம் இருந்து வந்தது. தன் பர்சனல் விவகாரத்தை உங்கள் அரசியலுக்காக பயன்படுத்தாதீர்கள் என்று அவர் பகிரங்கமாக வீடியோ வெளியிட்டு, வீரலட்சுமிக்கு எச்சரிக்கைவிடுத்திருந்தார். இப்படி காட்சிகள் மாறத்தொடங்கிய நிலையில், நேற்று சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். விஜயலட்சுமி விவகாரத்தில் இதுவரை மெளனம் காத்து வந்த சீமான், தன் மெளனத்தைக் கலைத்து, நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி என ஒருவரையும் விடாமல் வெளுத்து எடுத்தார். இந்த இரண்டு லட்சுமிகளையும் வைத்து தன்னை தகர்க்க முடியாது என்றவர், ஒரு கட்டத்தில் நான் ஒரு கேடுகெட்ட ரவுடி என்று கொந்தளித்தார்.

விஜயலட்சுமி புகாரை வாபஸ் வாங்கிய போது

சீமானின் இந்த பேச்சின் தாக்கம் மறைவதற்குள் யாருமே எதிர்பாராத திருப்பமாக நேற்று நள்ளிரவு திடீரென நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்து, காவல் நிலையத்திற்கு சென்று, தனது புகாரை வாபஸ் வாங்கினார்.

சீமானை எதிர்த்துப் தன்னால் தனியாக போராட முடியவில்லை என்றும், தமிழகத்தில் சீமானுக்கு ஆதரவு அதிகமிருப்பதாகவும், சீமானை யாராலும் எதுவும் செய்ய முடியாதெனவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து, தான் சீமான் விஷயத்தில் தோற்று விட்டதாகவும், சீமான் வெற்றி பெற்று விட்டார். தனக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றும் கூறிய நடிகை விஜயலட்சுமி, வழக்கை வாபஸ் பெறுவதற்கு யாரும் அழுத்தம் தரவில்லை என கூறிய அவர் , இனி சென்னைக்கே வரப்போவதில்லை என்று கூறிவிட்டு சென்றார்.

இத்துடன் இந்த விவகாரம் முடிந்திருக்கலாம். ஆனால், 12 ஆண்டுகளாக சீமான் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு கடைசி வரை எந்த பதிலுமே இல்லை. அப்படி எனில் விஜயலட்சுமியின் நோக்கம் தனக்கு நியாயம் வேண்டும் என்பதா அல்லது சீமானின் அரசியல் வாழ்க்கையில் சரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் இதையெல்லாம் செய்தாரா என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம். ஆரம்பம் முதலே எனக்கு நியாயம் வேண்டும் என்பதில்லாமல், சீமான் கைது செய்யப்பட வேண்டும், மக்களிடையே அசிங்கப்பட வேண்டும் என்பதையே தன்னுடைய நோக்கமும், எதிர்பார்ப்புமாக வெளிப்படுத்தி வந்தார் விஜயலட்சுமி. இனி ஒரு போதும் விஜயலட்சுமியின் புகார்கள் எடுபடப்போவதில்லை.

SCROLL FOR NEXT