அரசியல்

எனது வாட்ஸ் அப் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன: போலீஸார் மீது டியூப்பர் சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

காமதேனு

காவல் துறையினரால் தனது வாட்ஸ் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக யூடியூப்பர் சவுக்கு சங்கர் புகார் கூறியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. இதனால் கடலூர் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு எனக்கு கிடைத்த தகவல் படி, கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்தது போல், மாநில உளவுத்துறை மற்றும் சென்னை மாநகர காவல்துறை சட்டவிரோதமாக பல தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் வேலைகளைச் செய்து வருகிறது.

இதில், வாட்ஸ் அப்பை இடைமறித்து தகவல்களைச் சேகரிக்கும் வசதி உலகத்தில் எந்த ஒரு ஏஜென்சியிடமும் இல்லை என்பதால், வாட்ஸ் அப் மூலம் ஒருவர் மற்றொருவருடன் பேசக்கூடிய உரையாடல்களின் கால அளவு, யார் யாரைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள், எவ்வளவு நேரம் பேசுகிறார்கள் என்ற விவரத்தை எடுக்கக்கூடிய தொழில்நுட்பத்தை சென்னை மாநகர போலீஸார் மற்றும் மாநில உளவு பிரிவு போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் என்னை யார் யார் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்கிறார்கள் என்ற விவரத்தைக் கண்காணித்து , யார் எனக்குத் தகவல் தருகிறார்கள் என்றவற்றையும் கண்டறிந்து அவர்களை மிரட்டும் வேலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சனும் ஈடுபட்டு வருகின்றனர். இது உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் தீர்ப்புகளுக்கு முரணானது.

ஆளுங்கட்சிக்கு எதிராக பேசுபவர்களுக்குத் தகவல் எப்படி கிடைக்கிறது என்பதை கண்காணித்து வருகிறார்கள். இது தொடர்பாக உரிய ஆதாரங்கள் கிடைத்ததும் நிச்சயமாக நீதிமன்றத்தை நாடுவேன். நீதிமன்றக் கட்டுப்பாடுகள் இருப்பதால் இதுகுறித்து பின்னர் விரிவாக விளக்கம் அளிக்கிறேன் " என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT