அரசியல்

சசிகலாவிடம் விசாரணை ஆரம்பம்: சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு

காமதேனு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் நாளை தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் தேதி கொலை, கொள்ளை நடந்தது. எஸ்டேட் காவலாளியை கொன்றுவிட்டு அங்கிருந்த நகை, பணம், முக்கிய ஆவணங்கள் கொள்ளை போனது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய மூளையாகச் செயல்பட்டதாக மறைந்த முன்னாள் முதல்வரின் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான் இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. சேலம் ஆத்தூரில் நடந்த வாகன விபத்தில் கனகராஜ் இறந்தநிலையில், மற்றொரு வாகன விபத்தில் படுகாயத்துடன் உயிர்தப்பிய சயானை முதன்மைக் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். சயான் மூலம் மட்டுமே இந்த வழக்கின் மர்மங்கள் வெளிவர முடியும் என்பதால், ஜாமீனில் உள்ள சயானிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி உள்ளிட்டோரிடம் ஏற்கெனவே தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளது தனிப்படை. 5 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணிக்கு ஆஜராக வி.கே.சசிகலாவுக்கு நீலகிரி காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. கோடநாடு எஸ்டேட் ஆவணங்கள் சென்னைக்கு எப்படி வந்தது என்பது குறித்தும், கொள்ளை போன பொருட்கள் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அடுத்து, எடப்பாடி பழனிசாமியிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT