NGMPC093
NGMPC093
அரசியல்

’எம்ஜிஆர் மறைந்தபோது ஏற்பட்ட பிரச்சினையையே சரிசெய்தோம்; இப்போதும் சரியாகும்’: நம்பிக்கை தெரிவிக்கும் சசிகலா!

காமதேனு

“தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எம்ஜிஆர் மறைவின் போது ஏற்பட்ட பிரச்சனையையே சரிசெய்திருக்கிறோம். இப்போதைய பிரச்சினையையும் சரிசெய்வோம்.” எனத் தனது சுற்றுப் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய நிலையில் சசிகலா திடீரென தனது அரசியல் சுற்றுப் பயணத்தை அறிவித்திருந்தார். ‘புரட்சிப் பயணம்’ எனப் பெயர் வைத்து தொண்டர்களைச் சந்திப்பதற்காக இன்று முதல் அவர் தனது சுற்றுப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். தி.நகரில் இல்லத்திலிருந்து தொடங்கப்பட்ட இந்த பயணத்திற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். கோயம்பேடு, பூந்தமல்லி என போகும் வழியெல்லாம் தொண்டர்களைச் சந்தித்து வரும் சசிகலா, திருத்தணிக்கும் சென்றார்.

திருத்தணியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சசிகலா. அப்போது, “இந்த சுற்றுப் பயணத்தில் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு என்னைச் சந்தித்து வருகிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும் என அவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். தமிழகத்தில் அடுத்த ஆட்சியாக, அதிமுக ஆட்சி நிச்சயம் அமையும். அது மக்களாட்சியாக இருக்கும். அதிமுகவில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையைப் பார்க்கும் போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் என யாராக இருந்தாலும் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பைச் சரிசெய்து மீண்டும் வலிமையான அதிமுக ஆட்சியைக் கொண்டுவருவோம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு இதே போல ஒரு பிரச்சினை எழுந்தது. அதை என்னுடைய சின்ன வயதிலேயே பார்த்து வளர்ந்தவள் நான். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையும் சரி செய்ய முடியும். கழக தொண்டர்களும், வாக்களிக்கும் பொதுமக்களும்தான் தற்போதுள்ள பிரச்சினையைப் பொருத்தவரை தலைவர்களைத் தீர்மானிப்பார்கள். அவர்கள் என்னுடன் துணை நிற்கிறார்கள். என்னுடைய பயணம் தொடர்ந்து நடைபெறும்” என்றார்.

SCROLL FOR NEXT