அரசியல்

பசுந்தோல் போர்த்திய புலியிடம் அதிமுக சிக்கியுள்ளது: ஈபிஎஸ்சை எகிறியடிக்கும் சசிகலா!

காமதேனு

“ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப் படி கட்சியின் சட்டத்திருத்தத்தை மேற்கொள்கிறார்கள். இதற்கெல்லாம் யாருக்கும் அதிகாரம் இல்லை. திமுகவினருக்கு நாமே இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நான் அமைதியாக இருக்கிறேன் ” எனத் தொண்டர் சந்திப்பில் சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு களேபரங்கள் முற்றுப்பெற்ற நிலையில், மீண்டும் பொதுக்குழு நடத்துவதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுக்குழுவிற்குத் தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த களேபரங்களுக்கு மத்தியில் சசிகலா ‘புரட்சிப் பயணம்’ எனத் தனது அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி தொண்டர்களைச் சந்தித்து வருகிறார். 'அதிமுகவை எடப்பாடி பழனிசாமி சீரழித்துவிட்டார். துரோகிகளின் பிடியிலிருந்து அதிமுகவை மீட்க வேண்டும்' எனப் பேசி வருகிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்ட சசிகலா, திண்டிவனத்தில் தொடங்கி மரக்காணத்தில் பயணத்தை நிறைவு செய்தார். திண்டிவனத்தில் மக்களைச் சந்தித்த சசிகலா பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் நடைபெறும் சோதனைகளைப் பார்க்கும்போது எனக்கு வேதனையாக உள்ளது. எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியில், பொதுச்செயலாளரை அடிமட்ட தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை உருவாக்கினார். ஆனால் இன்று பசுந்தோல் போர்த்திய புலியிடம் சிக்கியது போல் அதிமுக உள்ளது. அதிமுக தொண்டர்கள் உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழலில் உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி கட்சியின் சட்டத்திருத்தத்தை மேற்கொள்கிறார்கள். இதற்கெல்லாம் யாருக்கும் அதிகாரம் இல்லை. திமுகவினருக்கு நாமே இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நான் அமைதியாக இருக்கிறேன். அதிமுக அடிமட்ட தொண்டர்களால் உருவான கட்சி. அதனை எளிதில் அழித்துவிட முடியாது ” என சசிகலா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT