அரசியல்

ஆவணங்களை சமர்ப்பிக்க சசிகலாவுக்கு 90 நாட்கள் கெடு: வருமான வரித்துறை ஒட்டிச் சென்றது நோட்டீஸ்

ரஜினி

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் சொத்தை வருமான வரித்துறையினர் முடக்கி நோட்டீஸ் ஓட்டிச் சென்றுள்ளனர்.

2017-ம் ஆண்டு வருமான வரித்துறை சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்களுக்கு சொந்தமான சுமார் 150 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் வைத்திருந்ததும், 4430 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததும் கண்டறியப்பட்டது. தமிழகம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்களில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதை கண்டுபிடித்தனர். பல இடங்களில் பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி வைத்திருந்த காரணத்தால் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமானவரித்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஐந்தாண்டுகளாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து ஒவ்வொரு சொத்துக்களையும் கண்டறிந்து அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி முடக்கும் நடவடிக்கையில் வருமானவரித்துறை ஈடுபட்டு வந்தது.

அதன்படி 2019 ஆம் ஆண்டு 1600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும், பின்னர் 300 கோடி ரூபாய் மதிப்பிலான 65 சொத்துக்களையும், கடைசியாக 2 ஆயிரம் கோடி மதிப்பிலான சிறுதாவூர் பங்களாவையும் வருமான வரித்துறை முடக்கியது.

இதனை தொடர்ந்து சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தை பினாமி பெயரில் சசிகலா வாங்கிய சொத்து என உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வருமானவரித்துறையினர் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை வருமான வரித்துறையினர் முடக்கி பின்னர் வாசலில் நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.

அந்த நோட்டீஸில் 90 நாட்களுக்குள் சொத்து தொடர்பான ஆவணங்கள் முறைப்படி இருப்பின் அதை வருமான வரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் அச்சொத்தை விற்கவோ அல்லது வேறு யாரும் வாங்கவோ கூடாது என்று குறிப்பிபட்டுள்ளது. மேலும் நோட்டீஸ் நகல்களை நந்தனத்தில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் அலுவலகம் மற்றும் ஜெ.தீபா, ஜெ.தீபக் மற்றும் தி.நகர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது வருமானவரித்துறை முடக்கிய அந்த வீட்டில் இளவரசி உறவினர் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT