பாமக வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் பாலு
பாமக வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் பாலு  மதுபாட்டிலுடன் ராமதாஸ் புகைப்படம்: சமூக வலைதளங்களில் பரப்பிய விசிக, காங்கிரஸ் பிரமுகர்கள் மீது பாமக புகார்
அரசியல்

மதுபாட்டிலுடன் ராமதாஸ் புகைப்படம்: சமூக வலைதளங்களில் பரப்பிய விசிக, காங்கிரஸ் பிரமுகர்கள் மீது பாமக புகார்

காமதேனு

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மதுபாட்டிலுடன் இருப்பதாக பொய்யான செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பிய விசிக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பாமக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரான ஜெயராமன் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பாமக கட்சியி்ன் நிறுவனர் ராமதாஸ் மதுபாட்டிலுடன் இருப்பது போன்று பொய்யான செய்தியை சமூக வலைதளத்தில் பரப்பிய விசிக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் பாலு, "40 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக நிறுவனர் ராமதாஸ் மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 5-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவிகண்ணா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் மதுவை ஒழித்த லட்சணம் என்ற வாசகத்துடன் ராமதாஸின் இரண்டு புகைப்படங்களை இணைத்து அவருக்கு அருகில் மதுபாட்டில் இருப்பது போன்ற வகையில் பதிவிட்டிருந்தார். மேலும் இந்த செய்தியின் உண்மை தன்மை அறியாமல் காங்கிரஸ் பிரமுகரும் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனுமான ராமசுகந்தன் வித் நோ கமெண்ட்ஸ் எனக்கூறி அந்த பதிவை மீண்டும் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இப்புகைப்படத்தில் உள்ளது, பாட்டில் மதுபானம் அல்ல, தோல் வெடிப்புக்காக வயதானவர் பயன்படுத்தும் (CoLavita )ஆலிவ் ஆயில் என்று கூறினார். மதுவை ஒழிப்பதற்காக போராடி வரும் ராமதாஸின் நற்பெயரை கெடுக்கும் நோக்கில், உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பிய விசிக பிரமுகர் கவிகண்ணா மற்றும் காங்கிரஸ் பிரமுகர் ராமசுகந்தன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் செய்தி வெளியிட்டதற்கான உள்நோக்கம் குறித்தும் விசாரணை நடத்தி அந்த பதிவை உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு பொய்யான செய்தியை பரப்பிய கட்சியினர் மீது விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

SCROLL FOR NEXT