அரசியல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்குகள் வாபஸ்!

காமதேனு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தனியார் பால் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தபோது, தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் மூன்று தனியார் பால் நிறுவனங்களின் பால் மாதிரிகளை, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் ஆய்வகத்தில் ஆய்வு செய்து, அமைச்சர் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களின் தயாரிப்புகள் தரம் குறைந்தவை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் பொய் குற்றச்சாட்டு தெரிவிப்பதாகப் பால் நிறுவனங்கள் சார்பில் நீதிமன்றம் சென்றனர். ஹட்சன், டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில் தலா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ல் வழக்கு தொடர்ந்தார்கள். இதையடுத்து, ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுக்களைத் தெரிவிக்க அமைச்சருக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் கடந்த 2017-ல் தொடரப்பட்ட இந்த வழக்கில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாக, பால் நிறுவனங்கள் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகத் தனியார் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

SCROLL FOR NEXT