அரசியல்

`வெறுப்பு அரசியலால் தந்தையை இழந்தேன்; அன்பான நாட்டை இழக்க மாட்டேன்’: ராகுல் காந்தி உருக்கம்

காமதேனு

``வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன்; அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன்'' என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கன்னியாகுமரியிலிருந்து இந்திய ஒற்றுமை நடைபயணத்தை இன்று தொடங்க இருக்கிறார் ராகுல்காந்தி. குமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொள்ளும் ராகுல், 3,750 கிலோ மீட்டர் தூரத்துக்கு 12 மாநிலங்களில் பயணிக்கத் திட்டமிட்டு, மொத்தம் 150 நாட்கள் பயணம் செய்கிறார். இதற்காக நேற்று இரவு சென்னை வந்த ராகுல் காந்தி இன்று காலை தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தியின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

தந்தையின் நினைவிடத்திற்கு வந்த ராகுல் காந்தி கரம் கூப்பி, சிரம் தாழ்ந்து, கண்களை மூடி ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்தினார். பின்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு அப்பகுதியில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார். அந்த இடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தந்தை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, அது குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் ராகுல் காந்தி. அதில், “வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன். அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன். அன்பு வெறுப்பை வெல்லும். நம்பிக்கை பயத்தை வெல்லும். ஒன்றாக, நாம் வெல்வோம்” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT