அரசியல்

ஆம் ஆத்மிக்கு போட்டியாகக் களமிறங்கிய காங்கிரஸ்: அனல் பறக்கும் குஜராத் அரசியல்!

காமதேனு

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும், ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ராகுல் காந்தி அளித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை குஜராத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டு விவசாயக் கடன், விளைபொருட்கள் நேரடி கொள்முதல் என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்துப் பரபரப்பைக் கிளப்பினார்.

இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ஆம் ஆத்மிக்கு போட்டியாக பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார்.

பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “மாநில மக்களுக்கு பத்து லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவம் மற்றும் மருந்துகள் வழங்கப்படும். 3 லட்ச ரூபாய் வரை உள்ள விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும். ஒரு லிட்டர் பாலுக்கு 5 ரூபாய் வரை மானியமாகக் கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கொடுக்கப்படும். 1000 ரூபாய்க்கு விற்கப்படும் சமையல் எரிவாயு 500 ரூபாய்க்கு வழங்கப்படும்.

பெண்களின் இலவசக் கல்விக்காக 3000 ஆங்கில பள்ளிகள் தொடங்கப்படும். கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் வழங்கப்படும். விவசாயிகளின் மின்சாரக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். மேலும் மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மூன்று பிரதான கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிவருவதால், குஜராத் அரசியல் அனல் பறக்கத் தொடங்கி இருக்கிறது.

SCROLL FOR NEXT