அரசியல்

பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி திடீர் கைது: நாடு முழுவதும் கொந்தளிக்கும் காங்கிரஸ்!

காமதேனு

வேலையில்லாத் திண்டாட்டம் , ஜிஎஸ்டி வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக இன்று டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தி மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் போராடிய ராகுல் காந்தி உள்ளிட்ட பல மூத்த காங்கிரஸ் தலைவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு உடை அணிந்து வந்து டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். நாடாளுமன்றத்தில் பேரணியாக செல்ல முற்பட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் கைது செய்யப்பட்டார்.

ராஷ்டிரபதி பவன் மற்றும் பிரதமர் இல்லத்திற்கு செல்லும் அணிவகுப்பினை தொடங்குவதற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். முன்னதாக, விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகக் கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து "சலோ ராஷ்டிரபதி பவன்" அணிவகுப்பை நடத்தவும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பிற மூத்த தலைவர்கள் பிரதமர் இல்லத்திற்கு பேரணியாக செல்லவும் திட்டமிட்டனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போராட்டம் மற்றும் பேரணிக்கு அனுமதி வழங்காத போலீஸார், டெல்லியின் முக்கிய பகுதிகளில் தடைகளை ஏற்படுத்தினர். போலீஸாரின் 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விலை உயர்வுக்கு எதிராக டெல்லியின் சில பகுதிகளில்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் நூற்றுக்கணக்கான காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT