அசோகவனத்தில் சீதா தேவி கோயிலில் வழிபடும் அண்ணாமலை 
அரசியல்

தமிழகத்தில் ராமராஜ்யம் அமைக்க இலங்கை சீதா கோயிலில் அண்ணாமலை வழிபாடு!

கரு.முத்து

இலங்கை சென்றிருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய இலங்கை சுற்றுப்பயணத்தை சீதாதேவி சிறை வைக்கப்பட்டிருந்த இடமான அசோக வனத்தில் இருந்து துவக்கியிருக்கிறார்.

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் சீதா எலிய என்ற இடத்தில் இருக்கிறது இந்த சீதா அம்மன் கோயில். ராவணன் சீதாதேவியைக் கடத்திக் கொண்டு போய் இலங்கையில் சிறை வைத்திருந்ததாக சொல்லப்படும் அசோக வனம் இதுதான் என்கிறார்கள். அசோகவனம் இப்பொழுது ஹக்கல பொட்டானிக்கல் கார்டன் என்று அழைக்கப்படுகிறது.

சுற்றிலும் காடுகளால் சூழப்பட்ட இந்த அசோகவனத்தில் சீதாதேவி தங்கியிருந்த இடத்தில் அவரின் நினைவாக இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு தமிழர்கள் மட்டுமல்லாமல் சிங்களவர்களும் சீதா தேவியின் வழிபாட்டுக்காக இங்கு வருகிறார்கள்.

இந்த கோயிலைச் சுற்றி ஓடும் ஆற்றில்தான் சீதாதேவி நீராடியதாக கோயில் கல்வெட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. சீதையைத் தேடி கடல்கடந்து சென்ற ஹனுமன் இங்கு தான் சீதையை சந்தித்தாராம். பலசாலியான ஹனுமனின் பெரிய பாதங்கள் இங்குள்ள பாறையில் பதிந்துள்ளது.

இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களின் அடையாளமாக மஹாவம்சம் கூறும் குவேனி தன்னுடைய கணவன் விஜயனை பாண்டிய இளவரசியிடம் பறி கொடுத்து விட்டு, இல்லற வாழ்வைத் துறந்து இதே நுவரெலியாவில் தான் வாழ்ந்து மறைந்தார் என்று மஹாவம்சம் கூறுகிறது.

அப்படி இந்திய பண்பாட்டையும், தமிழர்களின் தொன்மையான வரலாற்றையும் உலகம் அறியவைத்த இடத்துக்கு சென்ற பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இங்கு முறைப்படி வழிபட்டு தனது இலங்கை சுற்றுப்பயணத்தை தொடங்கியிருக்கிறார். இங்குள்ள சீதா கோயிலுக்கு சென்று வணங்கி சீதாதேவியின் அருள் பெற்று தமிழகத்தில் ராமராஜ்யம் அமைய அருள் வேண்டி நிற்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் பதிவுகளை இடுகிறார்கள்.

SCROLL FOR NEXT