அரசியல்

பிரதமரின் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகள் - ராகுலுக்கு கிடைத்த வெற்றி: காங்கிரஸ் பரபரப்பு கருத்து

காமதேனு

பிரதமர் மோடியின் ரோஸ்கர் மேளா மற்றும் 75,000 பணி நியமனங்கள் என்பது போதுமானதாக இல்லாவிட்டாலும், இது ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரைக்குக் கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரோஸ்கர் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான முன்னோடியாக 75,000 பேருக்கு இந்த நிகழ்வினைத் தொடர்ந்து நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக வீடியோ அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “ பிரதமரின் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் போதுமானதாக இல்லை. ஆனால் குறைந்தபட்சம் பிரதமர் வேலையில்லாத் திண்டாட்டம்தான் இப்போது மிகப்பெரிய பிரச்சினை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். ஏனெனில் அவர் வேலையில்லா திண்டாட்டம் குறித்து தொடர்ந்து பிரச்சினையை எழுப்புகிறார்.

ஆனால் மோடிஜி, நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று வாக்குறுதி அளித்தீர்கள், அதாவது எட்டு ஆண்டுகளில் 16 கோடி வேலை வாய்ப்புகள். ஆனால் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்பும் தேதியையும் நேரத்தையும் எங்களிடம் கூறுங்கள். இளைஞர்கள் வேலைவாய்ப்பை விரும்புகிறார்கள், ராகுல் காந்தி அவர்களுக்கான கேள்வியை எழுப்பிக்கொண்டே இருப்பார்" என்று கூறினார்.

முன்னதாக, இன்று ரோஸ்கர் மேளாவை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “கடந்த 8 ஆண்டுகளில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பில் கவனம் செலுத்தியது. இம்முறை சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை மனதில் வைத்து 75,000 பணி நியமனக் கடிதங்களை வழங்கவுள்ளோம். வரும் மாதங்களில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பணி நியமனக் கடிதங்களை வழங்க இதுபோன்ற மேளாவை நடத்தப் போகின்றன" என்று கூறினார்.

SCROLL FOR NEXT