அரசியல்

ஈபிஎஸ்சை வரவேற்க விமான நிலையத்திற்குள் மேடை: 6 அதிமுகவினர் மீது பாய்ந்தது வழக்கு

காமதேனு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் அனுமதியின்றி மேடை அமைத்த 6 அதிமுகவின்ர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகப் பதவி ஏற்ற எடப்பாடி பழனிசாமி, நேற்று முதல் முறையாக தென் மாவட்டங்களுக்கு வருகை தந்தார். மதுரை, சிவகாசி ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்தார் .

அப்போது அவருக்கு மதுரை விமான நிலையத்தில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்கள் தூவியும், மேளதாளங்கள் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது விமான விமான நிலைய பயணிகள் வருகை வாயிலில் முன்பு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி உதயகுமார் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் ஏற்பாட்டில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.

மதுரை விமான நிலையத்திற்குள் முதன் முறையாக அனுமதியின்றி அதிமுகவினர் மேடை அமைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் ஏராளமான அதிமுகவினர் விமான நிலையத்திற்குள் திரண்டதால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி விமான நிலைய வளாகத்திற்குள் மேடை அமைத்து, பிளக்ஸ் பேனர் வைத்தது தொடர்பாக அதிமுகவினர் 6 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் அவனியாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT