அரசியல்

மெரினாவில் கடல் சீற்றம்: மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்ட சிறப்புப்பாதை சேதம்

காமதேனு

'மேன்டூஸ்' புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை உடைந்து சேதம் அடைந்துள்ளது.

'மேன்டூஸ்' புயல் தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என்பதால், குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவொற்றியூர் போன்ற கடற்கரையில் பொதுமக்கள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  அதுபோல் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களும் மூடப்பட்டுள்ளன.

'மேன்டூஸ்' புயல் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மெரினா கடற்கரையில் 1.14 கோடியில் மரப்பலகையால் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை உடைந்து சேதம் அடைந்துள்ளது. குறிப்பாகக் கடலுக்கு அருகில் உள்ள பாதை பலத்த சேதம் அடைந்துள்ளது. கடந்த 3-ம் தேதி மாற்றுத் திறனாளிகள் விழாவில் பேசிய முதல்வர், ”சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் கால் நனைப்பதற்கு தமிழக அரசு செய்து கொடுத்துள்ள வசதியை எல்லோரும் அறிவார்கள். மாற்றுத் திறனாளிகளின் உரிமை என நினைத்து நாம் உருவாக்கியதுதான் அந்த அன்புப் பாதை. அந்த பாதையில் சென்று கடல் அலையில் அவர்கள் கால் நனைத்த போது அவர்களின் மகிழ்ச்சியை நானும் பார்த்தேன்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அந்த பாதை சேதமடைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சேதமடைந்த சிறப்புப் பாதை விரைவில் சரி செய்யப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT