அரசியல்

கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர்... காய் நகர்த்தும் ஈபிஎஸ்

கி.பார்த்திபன்

தமிழகம் முழுவதும் அதிமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று மாவட்டச் செயலாளர், துணைச் செயலாளர்கள், அவைத்தலைவர், பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் சேலம் அருகே ஓமலூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பொறுப்பாளரிடம் மனு தாக்கல் செய்தார். அவரது பெயரில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிகழ்வு முடிந்த பின் எடப்பாடி பழனிசாமி வெளியே வந்தபோது அங்கு சூழ்ந்திருந்த அதிமுகவினர் அவரை ஆதரித்து கோஷம் எழுப்பினர். கட்சியின் காவல் தெய்வம் எடப்பாடியார், புரட்சித்தலைவர் எடப்பாடியார் என்ற கோஷங்கள் விண்ணைக் கிழித்தன. அதில், ‘கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடியார்’ என முழங்கிய கோஷம் அனைவரையும் கவனம் கொள்ளச் செய்தது. ஆனால், இதை எடப்பாடி பழனிசாமி கண்டும் காணாதது போல் சிரித்தபடியே காரில் ஏறிச் சென்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. சசிகலா ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் பிரிந்து நின்றனர். அப்போது, சசிகலா பக்கம் எடப்பாடி பழனிசாமி இருந்தார். அச்சமயத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் கட்சியினரின் ஏகோபித்த ஆதரவுடன் பதவியேற்றனர். முதல்வராக பொறுப்பேற்க போகும் சூழலில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் நிலைமை தலைகீழானது. சசிகலா பக்கம் இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். கீரியும், பாம்புமாக இருந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் ஒன்றாகினர். அதன்பின் ஓபிஸ் துணை முதல்வரானார். கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் புதிதாக உருவாக்கி இருவரும் பங்கு போட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் தினகரன் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர். இச்சூழலில் ஓராண்டுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸூம் ஒன்றிணைந்து முழு ‘மூச்சாக’ எதிர்க்கத் தொடங்கினர். இச்சூழலில் இம்மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியது. இது ஓபிஎஸ் தரப்பைக் காட்டிலும் ஈபிஎஸ் தரப்பை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக அவரது ஆதரவு வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. இதையறிந்ததால் தான் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் முன் ஆஜரான ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஆதரவு குரல் கொடுத்தார். ஆனால் இதை ஈபிஎஸ் தரப்பு பெரிதுபடுத்தவில்லை.

அதேவேளையில் கட்சி தலைமைப் பொறுப்பை கைப்பற்றுவதற்கான ‘காய்’ நகர்த்தல்களை ஈபிஎஸ் தரப்பு தொடர்ந்து அரங்கேறி வருவதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது. இதை மறைமுகமாக வெளிப்படுத்தும் வகையில் தான் இன்று சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்து வெளியேறியபோது ‘கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடியார்’ என கோஷம் எழுப்பப்பட்டதாக அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. ஈபிஎஸ் காய் நகர்த்தல்கள் அவருக்கு கை கொடுக்குமா அல்லது என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT