அரசியல்

பரந்தூர் விமான நிலையம்: 13 கிராமமக்களின் போராட்டம் வாபஸ்

காமதேனு

பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கு எதிராக 13 கிராம மக்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய இருப்பதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியானது. இதை எதிர்த்து அப்பகுதியினர் 80 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வந்தனர். பள்ளி மாணவர்களும் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்த இருப்பதாகப் போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடக்கும் போது இது சிக்கலை ஏற்படும் என்பதால் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த அப்பகுதியினருக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில் இன்று போராட்டக் குழுவினருடன் தமிழக அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையில், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு ஆகிய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏகனாபுரம் கிராமக் குடியிருப்பு மற்றும் விவசாயிகள் நலக் கூட்டமைப்பினர் கொண்ட 8 பேர் அடங்கிய குழுவினர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை முதல்வருக்குத் தெரியப்படுத்தி விரைவில் சுமூக முடிவு எடுப்பதாக அமைச்சர்கள் அவர்களிடம் உறுதியளித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் தற்காலிகமாக விவசாயிகள் கூட்டமைப்பினர் போராட்டத்தைத் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT