அரசியல்

`நம்முடைய வழி தனி வழி'- தேனியில் முழக்கமிட்ட எடப்பாடி பழனிசாமி

காமதேனு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ``நம்முடைய வழி தனி வழி'' என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தேனி மாவட்டம், கம்பத்தில் கட்சி நிர்வாகிகள் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து கார் மூலம் இன்று அதிகாலை கிளம்பினார்.

திண்டுக்கல்- வத்தலக்குண்டு வழியாக தேனி வந்தார். தேனி புறவழிச்சாலையில் அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். இதன் பின்னர் கம்பம் வந்த அவரை மேளதாளம் முழங்க கட்சியினர் வரவேற்றனர்.

இதன் பின்னர், கட்சி நிர்வாகிகளின் இல்ல திருமணத்தை நடத்தி வைத்தார். அங்கு எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ``நாம் அனைவரும் இணைந்து எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவோம். நம்முடைய வழி தனி வழி எனும் பாணியில், ஒன்றிணைந்து செயல்படுவோம்'' என்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. எனினும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் கடந்த சில நாட்களாக தனது நிலைப்பாடு குறித்து மாறி, மாறி கருத்து தெரிவித்து வருகிறார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் எடப்பாடி பழனிசாமி இன்று கூறிய கருத்தும் பிளவுபட்ட அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதை மறைமுகமாக விரும்புகிறார் என தொண்டர்களின் மகிழ்ச்சி செய்தியாக உள்ளது.

SCROLL FOR NEXT