அரசியல்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ஓபிஎஸ் திடீர் அழைப்பு: காரணம் இதுதான்!

காமதேனு

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஜூலை 11-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நிகழ்வில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் தனது பங்கிற்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். அதிமுகவில் அதிகார யுத்தம் உச்சத்தில் இருக்கும் நிலையில், அதிமுகவில் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி கழக செயலாளர், தொகுதி இணைச் செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு ஏற்கெனவே பணிபுரிந்த அந்த பொறுப்புகளில் மீண்டும் அவர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது. காலியாக உள்ள பொறுப்புகளும் விரைந்து நிரப்பப்படும். புதிதாகப் பொறுப்புக்கு வந்தவர்களுக்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் நிலையில் ஓபிஎஸ்ஸின் இந்த அறிவிப்பு பலன் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT