ஓபிஎஸ்
ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு: நாளை அவசர வழக்காக விசாரணை
அரசியல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு: நாளை அவசர வழக்காக விசாரணை

காமதேனு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவிற்கு தடை கோரும் அவசர மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிக்க நீதிபதிகள் மகாதேவன், முகமது சபிக் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்டபோது, கட்சியில் இருந்து தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொதுச்செயலாளர் பதவி உருவாக்கியது, பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். அந்த முடிவுகளுக்கு தடை கோரிய இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு மார்ச் 22-ம் தேதி விசாரித்து, தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.

அந்த மனுக்கள் மீது நீதிபதி குமரேஷ்பாபு இன்று அளித்த தீர்ப்பில், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டார். மேலும் பிரதான உரிமையியல் வழக்குகளில் அதிமுக தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் தனி நீதிபதி தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் அணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி முறையீடு செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிப்பதாக அனுமதி அளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT