அரசியல்

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் சிறை: தண்டனை விவரங்களை அறிவித்தது தமிழக அரசு!

காமதேனு

ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆன்லைன் சூதாட்டங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் மற்றும் தற்கொலைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் முதல்வர் ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்திருந்தார். இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் ரவிக்கு அனுப்பி அதற்கான ஒப்புதலும் சமீபத்தில் பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சட்டத்தை நிரந்தர சட்டமாக கொண்டுவரத் தமிழக அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து அதை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு மூன்று மாத சிறை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது ஓராண்டு தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தை நடத்துபவருக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் எனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT