ஓபிஎஸ்-க்கு எதிராக முழக்கமிட்டவர்கள்
ஓபிஎஸ்-க்கு எதிராக முழக்கமிட்டவர்கள்  
அரசியல்

ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு... கிழித்து எறியப்பட்ட தீர்மான நகல்கள்: ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அட்டகாசம்

காமதேனு

பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து விட்டு செல்லும் வழியில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளரான துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டனர்.

இன்றைய பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த ஓபிஎஸ்-க்கு தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட யாரும் வரவேற்பு அளிக்கவில்லை. அழையா விருந்தாளியாகவே அவர் பார்க்கப்பட்டார். அவர் உள்ளே நுழைந்ததில் இருந்தே அவருக்கு எதிரான முழக்கங்கள் மிகவும் கடுமையாக எழுப்பப்பட்டன. இந்த நிலையில் பொதுக்குழு தொடங்கியதும் அவரால் முன்மொழியப்பட்ட இருபத்தி மூன்று தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் முற்றிலுமாக நிராகரித்தனர்.

அதனைத் தொடர்ந்து அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து சி.வி.சண்முகம் அவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க 11- 7 -2022 ல் அடுத்த பொதுக்குழு கூடும் என்று அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் எழுந்து இந்த பொதுக்குழு சட்டவிரோதமாக நடைபெறுகிறது என்று கூறி விட்டு வெளிநடப்பு செய்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் தீர்மான நகல்களை கிழித்து அவர் மீது வீசி எறிந்தனர். அவர்கள் வெளியேறும் வழியில் அவர்களை சூழ்ந்து கொண்ட ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை துரோகி என்று முழக்கமிட்டனர். அத்துடன் சிலர் அவரது முகத்தில் குத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பல தொண்டர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்தும் அவரை தாக்கினார்கள். அவருடன் வந்த வைத்திலிங்கத்தையும் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT