ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே
ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே 
அரசியல்

தாக்கரே - ஷிண்டே இரு அணிகளும் தசரா கொண்டாட அனுமதி மறுப்பு: அதிரடி காட்டிய மும்பை மாநகராட்சி

காமதேனு

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மும்பை சிவாஜி பூங்காவில் தசரா பேரணியை நடத்த உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய சிவசேனாவின் இரு பிரிவினருக்கும் பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அனுமதி மறுத்தது.

சிவாஜி பூங்காவில் அக்டோபர் 5 ம் தேதி தசரா பேரணியை நடத்த அனுமதிக் கோரிய உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி பூங்காவில் தசரா பேரணியை சிவசேனா நடத்துவது வழக்கம். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே தனது மனுவில், இந்த பாரம்பரியம் 1966 முதல் தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று தனது ஆதரவாளர்களிடம் பேசியபோது, ​​சிவாஜி பூங்காவில் பேரணி நடைபெறும் என்று உறுதியளித்தார்.

தங்களை உண்மையான சிவசேனா என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் தரப்பு கூறிக்கொள்ளும் நிலையில், சிவாஜி பூங்காவில் தசரா பேரணியை எந்த அணி நடத்தும் என்ற பதற்றம் நிலவியது. இந்த சூழலில் மும்பை மாநகராட்சி இந்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக 2020 மற்றும் 2021 ல் சிவாஜி பூங்காவில் தசரா பேரணி நடத்தப்படவில்லை. 2010 முதல், சிவாஜி பூங்காவில் சிறப்பு சூழ்நிலைகளைத் தவிர விளையாட்டு அல்லாத நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் மும்பை மாநகராட்சி ஒவ்வொரு ஆண்டும் தசரா பேரணிக்கு மட்டும் சிவசேனாவுக்கு அனுமதி வழங்கி வருகிறது. 2016 ம் ஆண்டில், சிவசேனாவின் தசரா பேரணி உட்பட சிவாஜி பூங்காவில் விளையாட்டு அல்லாத நடவடிக்கைகளுக்கு 45 நாட்கள் விலக்கு அளிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் நிறைவேற்றியது.

SCROLL FOR NEXT