மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன் Siva SaravananS
அரசியல்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திக்கவுள்ளேன்: மா.சுப்பிரமணியன் தகவல்!

காமதேனு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 4,308 மருத்துவ காலிப் பணியிடங்கள் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து மருத்துவமனையை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் குரங்கு அம்மை, தக்காளி அம்மை உள்ளிட்ட நோய்களால் யாரும் பாதிக்கப்படவில்லை. கேரளா-தமிழக எல்லையில் 13 இடங்களில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. பற்றாக்குறை ஏற்பட்டால் 10 சதவிகித மருந்துகள் வெளியிலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் உள்பட 4,308 மருத்துவ காலி பணியிடங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் டெல்லி சென்று மத்திய அமைச்சரைச் சந்தித்து தமிழகத்துக்கு தேவையான மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள், கோவையில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி, காஞ்சிபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்ற கோரிக்கைகளோடு சந்திக்க உள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT