அரசியல்

அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் ஓபிஎஸ் படத்துடன் பேனர்: பின்னணியில் நடந்தது இது தான்!

காமதேனு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது ஓபிஎஸ் படம் கத்தியால் வெட்டி எறியப்பட்டது. தற்போது மீண்டும் ஓபிஎஸ் படத்துடன் கூடிய பேனர் திரும்ப வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் களேபரத்தில் முடிந்த நிலையில், மீண்டும் பொதுக்குழு கூட்டுவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிரமாக ஏற்பாடு செய்துவருகின்றனர். பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அறிவித்தபடி ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் படத்தை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கத்தியால் வெட்டி நீக்கினர். இதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி கூட்டம் நடைபெற்றது செல்லாது என ஓபிஎஸ் அறிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதைச் சரிசெய்வோம் எனத் தெரிவித்தார். ஓபிஎஸ் பொருளாளர் பதவியில் நீடிக்கும் போது அவரின் படத்தை நீக்கியது குறித்து அந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தொண்டர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும், அதேபோன்ற பேனர் அங்கே உடனே வைக்கப்பட வேண்டும் என்றும் சீனியர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் ஓபிஎஸ் படத்துடன் கூடிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT