அரசியல்

திரௌபதி முர்முவுக்கு நாளுக்கு நாள் பெருகும் ஆதரவு: யஷ்வந்த் சின்ஹாவின் நிலை என்ன?

காமதேனு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு இப்போதே 61 சதவீத வாக்குகள் உறுதியாகியுள்ளது. திரௌபதி முர்மு வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது தேசிய ஜனநாயகக்கூட்டணியின் வாக்குகள் 48.89% ஆக மட்டுமே இருந்தது.

பாஜகவுக்கு எதிராக பலமான குடியரசுத் தலைவர் வேட்பாளரை முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் அங்கம் வகித்த யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக்கியது. ஆனால் பாஜக யாருமே எதிர்பார்க்காத வகையில் பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்முவை வேட்பாளராக்கியது. இதனால் எந்த கூட்டணியை ஆதரிப்பது என்று ஊசலாட்டத்தில் இருந்த பல கட்சிகளும் ‘பழங்குடியின செண்டிமென்ட்’ காரணமாக முர்முவை ஆதரித்தன. சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற காங்கிரஸ் கூட்டணி கட்சிகளே முர்முவை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், மதசார்பற்ற ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம், சிவசேனா, ஜேஎம்எம் போன்ற கட்சிகள் வரிசையாக திரௌபதி முர்முவை ஆதரித்து வருகின்றன. எனவே ஜூலை 18 -ல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை முர்மு பெறும் சூழல் எழுந்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் உள்ள 10,86,431 வாக்குகளில், பல்வேறு மாநில கட்சிகளின் ஆதரவிற்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு இப்போது 6.67 லட்சத்திற்கும் அதிகமான வாக்குககள் உறுதியாகியுள்ளது.

இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் 3.08 லட்சம் வாக்குகள் அடங்கும். பிஜு ஜனதா தளத்துக்கு 32,000 வாக்குகள் உள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு சுமார் 44,000 வாக்குகள், தெலுங்கு தேசம் கட்சிக்கு சுமார் 6,500 வாக்குகள், சிவசேனாவுக்கு 25,000 வாக்குகள் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 5,600 வாக்குகள் உள்ளன.

காங்கிரஸ், திரிணாமுல், திமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, சமாஜவாதி உள்ள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதில் தற்போது சிவசேனா மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக்கு ஆதரவளித்து விட்டன. எனவே தற்போதைய சூழலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கான ஆதரவு 36.32 சதவீதமாக சுருங்கி விட்டது. இன்னும் ஆம் ஆத்மி மற்றும் சில சிறிய கட்சிகள் மட்டுமே தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. எனவே தற்போதைய சூழலில் திரௌபதி முர்முவின் வெற்றி கிட்டத்திட்ட உறுதியாகியுள்ளது.

SCROLL FOR NEXT