நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் மாநகராட்சி நாகர்கோவில் மாநகராட்சி கட்டிடத்திற்கு கலைவாணர் பெயர்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது அரசு
அரசியல்

நாகர்கோவில் மாநகராட்சி கட்டிடத்திற்கு கலைவாணர் பெயர்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது அரசு

காமதேனு

நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது இருந்த இடத்தில் இருந்து மாற்றலாகி புதிதாக வேறு இடத்தில் கட்டுமானப் பணிகள் நடந்துமுடிந்துள்ளது.

இதற்காக இந்த இடத்தில் இருந்த கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டது. புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் மாநகராட்சி கட்டிடத்திற்கு கலைவாணர் பெயரைச் சூட்டாவிட்டால், முதல்வர் ஸ்டாலின், இந்நிகழ்வில் கலந்துகொள்ளக் கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்தக் கட்டிடம் கட்டுமானப் பணி தொடங்கிய காலத்திலேயே மாநகராட்சிக் கவுன்சில் கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் நடந்தது. அப்போது இந்தக் கட்டிடத்திற்கு கலைஞர் அரங்கம் எனப் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக கலைவாணரின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இவர்களுக்கு ஆதரவாக அதிமுக, பாஜகவும் போராட்டத்தில் குதித்தது.

இந்நிலையில் தான் ஏற்கெனவே தமிழக அரசு, அரசுநிதியில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு கவுன்சில் கூட்டத்தில் பெயர் தீர்மானிக்கமுடியாது எனத் தெளிவுபடுத்தி இருந்தது. இதனால் இப்பிரச்சினை இடைக்காலமாக ஓய்ந்து இருந்தது. இந்நிலையில் மாநகராட்சிக் கட்டிடம் திறப்புவிழா தேதி தீர்மானிக்கப்பட்ட பின்பும் அதில் கலைவாணர் எனப் பெயர் சூட்டப்படவில்லை. அப்படி மாநகராட்சிக் கட்டிடத்திற்கு கலைவாணர் பெயர் சூட்டாவிட்டால் முதல்வர் இந்நிகழ்வில் பங்கேற்கக் கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வருக்கும் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், “நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலகக் கட்டிடம் கலைவாணர் பெயரிலேயே அழைக்கப்படும் ”என தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT