அரசியல்

திண்டுக்கல்லில் ஒரே மேடையில் பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா: மீண்டும் அனலைக் கிளப்பும் அரசியல்

காமதேனு

பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஒரே மேடையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நவ.11-ம் தேதி தமிழகம் வர உள்ளார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வரும் மோடி, சென்னை- பெங்களூரு, மைசூர் இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலைக் கொடி அசைத்துத் தொடக்கி வைக்கிறார்.  இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, பெங்களூருவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். மேலும்  108 அடி உயரக் கெம்பே கவுடா சிலையையும் திறந்து வைக்கிறார். அதன் பிறகு 3 மணியளவில் தனி விமானம் மூலம் மதுரை வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திண்டுக்கல் செல்ல இருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி கிராம நிறுவனம் தொங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி அதன் பவளவிழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. அத்துடன் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. இந்த இருவிழாக்களிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்த விழாவில் 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்தவர்களுக்குத் தங்கப் பதக்கங்களையும் வழங்கவுள்ளார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,  முதல்வர் ஸ்டாலின்,  மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருமொழிக் கொள்கை, நீட் தேர்வு, ஆளுநருக்கு எதிர்ப்பு எனத் தமிழக அரசியல் உள்ள நிலையில் ஒரே மேடையில் இவர்கள் ஒன்றாக கலந்து கொள்ள இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT