அரசியல்

காலை சிற்றுண்டி திட்ட விழாவில் கவுரவிக்கப்பட்ட கமலாத்தாள் பாட்டி: காரணம் இதுதான்!

காமதேனு

காலை சிற்றுண்டி திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர், கோவையைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டியைக் கவுரவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், ‘அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது’ என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில் மதுரையில் அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் கோவை கமலாத்தாள் பாட்டியைக் கவுரவிக்கும் விதமாக அவருக்குப் பொன்னாடை அணிவித்து, ‘ஒரு நூற்றாண்டின் கல்விப் புரட்சி’ என்னும் நூலின் முதல் பிரதியை அவருக்கு வழங்கினார்.

கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த வடிவேலம்பாளைத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள். கடந்த ஐம்பது வருடங்களாகக் குறைந்த விலையில் இட்லி விற்று ஜீவனம் தேடிவருகிறார். ஆரம்பக் காலத்தில் 25 பைசாவிற்கு இட்லி விற்கத் தொடங்கியவர், விலையேற்றத்தின் காரணமாக தற்போது ஒரு ரூபாய்க்கு விற்றுவருகிறார். கிரைண்டர், கியாஸ், மிக்ஸி என எந்த சாதனங்களும் இன்றி சொந்த உழைப்பில் உரலில் மாவு அரைத்து, விறகு அடுப்பில் சமைத்துப் பரிமாறி வருகிறார்.  இவரின் சேவையைப் பாராட்டும் விதமாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இவருக்கு சொந்த வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.  இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினால் கமலாத்தாள் இன்று கவுரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT