அரசியல்

`ஆளுநரை சந்தித்து இருக்கிறார் கும்பகர்ணன்'- எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

காமதேனு

"கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து முழித்துக் கொண்டவராக எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு எல்லோரையும் தூக்கிக்கொண்டு போய் ஆளுநரை சந்தித்து இருக்கிறேன் என்று சொல்வதற்கு என்ன உண்மையான காரணம் என்பதை கேட்க விரும்புகிறேன்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநரை சந்தித்து பொய்களின் ஒட்டுமொத்த வடிவமாக புளுகு மூட்டையை கோரிக்கை மனுவாக அளித்து செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார். அதிமுகவை யார் கைப்பற்றுவது என்று அவர்களுக்கிடையே இப்போது ஒரு பெரிய யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த யுத்தத்திலே தான் வெற்றி பெற வேண்டி தன்னுடைய எஜமானர்களை சென்று சந்தித்து விட்டு அதே கையோடு இப்போது தான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நினைப்பு திடீரென வந்தவுடன் சென்னையில் ஆளுநரை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வந்திருக்கிறார்.

ஆளுநரிடம் அளித்த அறிக்கையில் பல்வேறு கருத்துக்களை கூறியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். கோவையில் நடைபெற்ற கார் காஸ் வெடிப்பு சம்பவம் அக்டோபர் 23-ம் தேதி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இருக்கக்கூடிய பள்ளியில் ஜூலை மாதம் 17-ம் தேதி நடந்தது. கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் நவம்பர் 15-ம் தேதி நடக்கிறது. இப்படி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மாதங்களில் நடந்த சம்பவங்களுக்கெல்லாம் திடீரென்று ஞானோதயம் வந்தவராக கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து முழித்துக் கொண்டவராக எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு எல்லோரையும் தூக்கிக்கொண்டு போய் ஆளுநரை சந்தித்து இருக்கிறேன் என்று சொல்வதற்கு என்ன உண்மையான காரணம் என்பதை கேட்க விரும்புகிறேன்.

ஒருவேளை ஓ.பன்னீர் செல்வத்துடன் தன்னை இணைத்து வைத்து அப்போது இருந்த ஆளுநர் சமரச உடன்படிக்கை உருவாக்கியதுபோல இப்போது அதிமுகவில் இரு அணிகளுக்கும் இடையே இந்த உட்கட்சி போட்டோ போட்டியில் தனக்கு ஒரு சாதகமான நிலையை உருவாக்குவதற்கு அங்கே போய் முறையிட்டாரா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது?. இன்னொரு பக்கம் தினமும் ஒரு அறிக்கை வெளியிட்டு ஊடக வெளிச்சத்தை உருவாக்கி அதன் வாயிலாக நாங்கள்தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி என்கிற ஒரு தோற்றத்தை தொடர்ச்சியாக எழுப்பி அதை நிலை நிறுத்தக்கூடிய முயற்சியிலே பாஜக ஈடுபட்டிருக்கும் நிலையில் பாஜகவுக்கு எந்தவிதமான பதிலடியும் கொடுக்க முடியாத எடப்பாடி பழனிசாமி மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் எந்த நினைப்போடு ஆளுநரை சந்தித்திருப்பது ஏன்?

இப்போதாவது அவருக்கு இந்த விழிப்பு வந்திருக்கிறதே? அவர் யாரை கொழுகொம்பாக நம்பி பற்றி கொண்டிருக்கிறாரோ அவர்களே அவருக்கு சத்துருவாக உள்ளே இருக்கிறார்களே என்ற ஞானோதயம் இப்போதாவது விழிப்பு வந்திருக்கிறது என்று நான் எண்ணுகிறேன். ஒருவேளை பாஜகவில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற உட்கட்சி பிரச்சினை உச்ச கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டை அதிலிருந்து திசை திருப்புவதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு கருவியாக மாறி இன்று ஆளுநரை சந்தித்திருப்பது போன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறாரா? என்ற கேள்வி எனக்குள் எழுந்திருக்கிறது. சென்னையில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருவதை பொறுக்க முடியாமல் எடப்பாடி இப்படி நடந்து கொள்கிறார்" என்றார்.

SCROLL FOR NEXT