அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு 
அரசியல்

எடப்பாடியின் குற்றச்சாட்டுகளுக்கு தங்கம் தென்னரசு துபாயிலிருந்து சுடச்சுட பதில்!

கரு.முத்து

இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி முதல்வரின் துபாய் பயணம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், முதல்வருடன் பயணித்து தற்போது துபாயில் இருக்கும் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடியின் ஒவ்வொரு கேள்விக்கும் வீடியோ மூலமாக தனித்தனியாகப் பதிலளித்திருக்கிறார்.

தங்கம் தென்னரசு அளித்திருக்கும் பதில்கள்:

“மாண்புமிகு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இன்று பேட்டி அளித்திருக்கிறார். அதில் முதலமைச்சர் தனி விமானத்தில் பயணம் செய்திருப்பதை விமர்சித்திருக்கிறார். துபாய் செல்லும் விமானங்களில் பயண சேவை கிடைக்காதபட்சத்தில்தான் அவர் தனி விமானத்தைப் பயன்படுத்தினார். அதற்கான கட்டணத்தையும்கூட அரசாங்க செலவில் இல்லாமல் திமுகவே செலுத்தியிருக்கிறது.

அடுத்ததாக முதல்வர் குடும்ப சுற்றுலா மேற்கொண்டிருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தி இருக்கிறார். முதல்வரின் இந்தப் பயணமானது முதலீடுகளை ஈர்ப்பதற்கானது மட்டும் அல்லாமல் வெளிநாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்தின் நலனுக்காகவும்தான் என்பதை இங்குள்ள தமிழ்ச் சமூகம் அவருக்கு அளித்த மிகப்பெரிய வரவேற்பு மூலம் உணர்ந்துகொள்ள முடிந்தது.

துபாய் வர்த்தக கண்காட்சி முடிவடையும் நேரத்தில் முதல்வர் சென்றிருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். இந்த வர்த்தகக் கண்காட்சியில் ஆரம்பத்தில் அதிகம் வரவேற்பு இல்லாமல் இருந்தது. இப்போது முடிவடையும் தறுவாயில்தான், அதுவும் கடந்த ஒரு வாரமாகத்தான் உலகமெங்கும் இருந்தும் இங்கு அதிகம் பேர் வருகிறார்கள். அதனால் இப்போது இங்கு வந்திருப்பது என்பது மிகுந்த பலன்களை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. இதுதான் சரியானதாகவும் இருக்கிறது.

அடுத்து சட்டம் ஒழுங்கு குறித்தும் அவர் பேசியிருக்கிறார். கடந்த கால எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி எல்லாம் சந்தி சிரித்தது என்பதை அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

விருதுநகர் பாலியல் வழக்கு குறித்தும் அவர் கூறியிருக்கிறார். இந்த வழக்கு குறித்து சட்டமன்றத்திலேயே முதல்வர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு சிறப்பு அதிகாரியை நியமித்து இந்த விஷயத்தில் நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சரியான தண்டனை பெற்று தரப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை இந்தியாவுக்கே முன்னோடியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அப்படி ஒரு நியாயமான முதல்வராகச் செயலாற்றிக்கொண்டிருக்கும் முதல்வருக்கு கிடைக்கும் புகழையும், பெருமையையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி இத்தகைய புளுகுகளை அவிழ்த்து விடுகிறார். தேவையற்ற இதுபோன்ற கருத்துக்களைக் கூறுவதை அவர் தவிர்க்க வேண்டும்.”

இவ்வாறு தங்கம் தென்னரசு வீடியோ மூலம் பதில் அளித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT