அரசியல்

ஆர்எஸ்எஸ் நீதிமன்ற கதவுகளைத் தட்டும்போது, தமிழக அரசும் இதைச் செய்யும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

காமதேனு

ஆர்எஸ்எஸ் நீதிமன்ற கதவுகளைத் தட்டும்போது, தமிழக அரசும் தன்னுடைய கருத்துகளை எடுத்து வைக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகர வெள்ளத் தடுப்புப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின்போது பாதிக்கப்பட்ட இடங்களில் 80 சதவீத இடங்களில் முற்றிலுமாக பாதிப்பு இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பணிகள் நிறைவுற்றுள்ளது.

இதற்காக பல்வேறு தரப்பினரும் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு சில தாழ்வான இடங்களில் நீர்த்தேங்கியிருந்தது. அந்தப் பகுதிகளிலும் இன்று காலையோடு நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

பெருமழைக்குப் பிறகு கழிவுநீர் அடைப்பு என்பது ஏற்படுவது இயல்பானது. கழிவுநீர் அடைப்புகளை உடனடியாக அகற்றுவதற்குப் பாதிப்பு இல்லாத பகுதிகளிலிருந்து அதிநவீன இயந்திரங்களின் துணையோடு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்படக் கூடிய அனைத்து தரப்பு மக்களுக்கும் கொசுவலை வழங்கச் சொல்லி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.” என்றார்.

மேலும், ஆர்எஸ்எஸ் பேரணி குறித்த கேள்விக்கு, “இது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற மாநிலம். சட்டத்திற்குட்பட்டு சட்ட ஆட்சி நடைபெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆர்எஸ்எஸ் நீதிமன்ற கதவுகளைத் தட்டும்போது, தமிழக அரசும் தன்னுடைய கருத்துகளை எடுத்து வைக்கும். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதற்கு முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார் “ என்றார்.

SCROLL FOR NEXT